டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க தான் வேண்டும். அதுபோலத் தான் சனாதனமும். இது சமத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது, மாற்ற முடியாதது என்று அர்த்தம். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று உருவானது திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
ராஜ்நாத் சிங் பேச்சு
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், சனாதன தர்மத்தை திமுக தாக்குகிறது. காங்கிரஸ் மவுனம் காக்கிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஏன் இந்த விவகாரத்தில் எதையும் பேசவில்லை. ஏன் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே என யாரும் வாய் திறக்கவில்லை. சனாதன தர்மம் என்பது பிரார்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமல்ல.
சனாதன எதிர்ப்பு
இது ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. இந்த பேச்சிற்கு இந்தியா கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் இந்த நாடு உங்களை மன்னிக்காது என்று கூறினார். கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேசுகையில், ஆட்சிக்கு வரத் துடிக்கும் சில கட்சிகளின் மனநிலை இப்படி இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத மற்றும் மனிதநேய விரோத நடவடிக்கை.
ஹிட்லர் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதிக்கு ஹிட்லர் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல், எப்போதெல்லாம் சனாதனம் தாக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மவுனம் காத்து வருகின்றன. நமது நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியா கூட்டணி பதில்
பிகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி பேசுகையில், இந்தியா கூட்டணி மும்பையில் நடந்த கூட்டத்திலேயே சனாதன தர்மத்தை ஒழித்து கட்ட முடிவு செய்துவிட்டதாக நினைக்கிறேன். ஏனெனில் உதயநிதியின் கருத்திற்கு இதுவரை ராகுல் காந்தியோ, நிதிஷ் குமாரோ, லாலு பிரசாத்தோ பதில் கூறவில்லை என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூறுகையில், இந்து சமூகம் வெறுப்புணர்விற்கு ஆளாவது இது முதல்முறை அல்ல.
போதிய அறிவு இல்லை
சனாதனத்திற்கு எதிரான வெறுப்புணர்வை கொண்டிருப்பவரால் தான் இப்படி எல்லாம் பேச முடியும். காலங்காலமாக இப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். சனாதனத்தை பற்றி போதிய அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என்று கூறினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், உதயநிதி மிகவும் பதற்றப்படுகிறார்.
திமுகவின் அறியாமை
சனாதன தர்மத்தை யாராலும் தடுக்க முடியாது. சனாதனம் என்பது நல்லொழுக்க வாழ்க்கையை உணர்த்துகிறது. திமுக அப்படி ஒரு விஷயத்தை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. முதலில் சனாதனம் பற்றி படித்து புரிந்து கொள்ளுங்கள். இப்படியான பேச்சு அறியாமையை தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.