தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமாக்களில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’க்கு தனி இடம் உண்டு. ஒரு ராவான… ரசனையான, கேங்ஸ்டர் படமாக பெயர் வாங்கின படம் அது.
அதிலும் வெற்றிமாறனோடு தனுஷ் இணையும்போதெல்லாம் அவரின் நடிப்பு முந்தைய ஹைஸ்கோரை மிஞ்சிவிடும் என்பதை, இந்த ‘வடசென்னை’யிலும் மிஞ்சியிருப்பார் தனுஷ். ஆடுகளம், அசுரன் என தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தது வெற்றிமாறன் கூட்டணி.
அதெல்லாம் சரி, கடந்த 2018ல் வெளியான படம் பற்றி இப்போது எதற்கு என்கிறீர்களா? ‘வடசென்னை’யின் போது அமைத்த செட்களை எல்லாம் இப்போது கலைத்துவிட்டனர். எனவே ‘வடசென்னை 2’ படம் டிராப் ஆகிறது என்ற ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உள்ளது. இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இனி..
”வெற்றிமாறன் – தனுஷ் இணைந்த ‘வட சென்னை’ படப்பிடிப்புக்காக அடுக்குமாடி வீடுகள், வட சென்னையின் ஏரியாக்களை கலை இயக்குநர் ஜாக்கி செட் போட்டிருந்தார். அவரது கைவண்ணத்தில் நிஜ வடசென்னையையே கண்முன் கொண்டு வந்திருப்பார். ‘வடசென்னை’ படமாகும் போதே, 40 சதவிகிதம் அதிகமாக படமாக்கியிருப்பார் வெற்றி. அதனால், அதை இரண்டு பாகங்களாக வெளியிடும் திட்டத்தில் இருந்தனர்.
இதனிடையே ‘வடசென்னை’ படப்பிடிப்பு நடந்த காசிமேடு அதன் சுற்றுவட்டார ஏரியாக்களில் அமைத்த செட்களை எல்லாம் அப்போதே, ஒவ்வொன்றாக கலைத்துவிட்டனர். படத்தின் நீளம் கருதியே அதை இரண்டு பாகங்களாக வெளியிட நினைத்தனர். ‘வடசென்னை’ வெளியான வேகத்திலேயே தற்போது ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பைப் போலவே அந்த சமயத்தில், ‘வடசென்னை 2’க்கான படப்பிடிப்பையும் உடனடியாக எடுக்க நினைத்தனர்.
ஆனால், சிலர், ”எங்கள் வட சென்னை இப்போது எவ்வளவுவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உங்கள் வடசென்னையில் பெண்களை கெட்ட வார்த்தை பேசுபவர்களாகவும், படிப்பற்றவர்களாகவும் காண்பித்து அசிங்கப்படுத்தியுள்ளனர்.’ என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இப்படி ஒரு பிரச்னையால் வடசென்னை ஏரியாக்களில் இரண்டாம் பாகத்திற்கான செட்கள் அமைக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில் தான் ‘அசுரன்’ படத்திற்கு வெற்றியும், தனுஷும் சென்றனர். அதன் பிறகு தனுஷ் ‘பட்டாஸ்’, ‘கர்ணன்’ என அடுத்தடுத்து பிஸியானார்.
வெற்றியும் ‘விடுதலை’ படத்தை இயக்கினார். இப்போது ‘விடுதலை 2’வை இயக்கி வருகிறார். அடுத்து ‘வாடிவாசல்’ காத்திருக்கிறது. அதனை முடித்துவிட்டு விஜய்யை இயக்குவார் என்ற பேச்சு இருக்கிறது. ‘நானும் விஜய்யும் ரொம்ப நாளாகவே இணைந்து படம் பண்ணுவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். விஜய் சார் ரெடியாத்தான் இருக்கார்.’ என வெற்றியே சொல்லியிருக்கிறார்.
‘வடசென்னை 2’வும் நிச்சயம் வரும்’ என்றும் சொல்கிறார். அதைப் போல தனுஷ் இப்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்திருக்கிறார். ‘தனுஷ் 50’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு சேகர் கம்முலாவின் படத்திற்கு செல்கிறார். அதனையத்து மாரிசெல்வராஜ், அருண் மாதேஸ்வரன் படங்கள் இருக்கிறது. ஆனால், நிச்சயம் வடசென்னை படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்பதே வெற்றிமாறன், தனுஷ் இருவரும் விரும்புகின்றனர். எனவே இருவரின் லைன் அப் கள் முடிந்த பிறகோ, அல்லது இடைப்பட்ட நேரத்திலோ வடசென்னை 2 டேக் ஆஃப் ஆகும் வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உங்களுக்குப் பிடித்த படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்