வெற்றிமாறன்: `என் வாழ்வை மாற்றிய தருணம்!' – அன்பு, ராஜன், பில்ஜி பாத்திரப் படைப்புகள்; ஒரு பார்வை

மேடையில் ஒரு நடிகரின் பெயரைச் சொன்னவுடன், சில நிமிடங்கள் பேசும் நபரை பேசவிடாமல், விசில் சத்தத்தால் அரங்கை அதிர வைக்கும் காட்சிகளை நிறைய விழா மேடைகளில் பார்த்திருப்போம்.

ஆனால் சமீபத்தில் நடந்த இசை வெளியிட்டு விழாவில் சற்று வித்தியாசமாக ஒரு இயக்குநரின் பெயர் சொன்னவுடன் அக்காட்சி அரங்கேறியது. அங்கு ஒலித்த பெயர் `வெற்றிமாறன்’ . 

வெற்றிமாறன்

“சினிமா என்பது ஒரு அறிவியல், அடுத்தே அது வியாபாரம். இந்த இரண்டையும் சிறப்பாக கையாளும் இணைப்பு புள்ளியாகிறது கலை” என்கிறார் வெற்றிமாறன். அவரின் கலையை செதுக்கியது இலக்கியங்கள் என்பார் எப்போதும். சிறுவயதில் வீட்டு அலமாரியில் எடுத்த `அரும்பு’ புத்தகம் தொடங்கி, 16 வயதில் என் கையில் வந்த `ரூட்ஸ்’ புத்தகம் வரை  “உலகத்தைப் பற்றிய எனது பார்வையையே மாற்றியதே புத்தகங்கள் ” என்கிறார் வெற்றி. அத்தகைய வெற்றிமாறனின் படைப்புகளில் இலக்கிய தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை பற்றிய ஓர் பார்வை.

வெற்றிமாறன், “இலக்கிய உன்னதங்கள் இல்லாத புத்தகங்களே என் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது, ஒரு கதை எப்படி சொல்லப்படுகிறது என்பதை விட எங்கிருந்து சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்” என்கிறார். இந்த புள்ளியில் சிந்தித்து பார்த்தால் உலகே கொண்டாடிய அலெக்ஸ் ஹெலியின் `ரூட்ஸ்’ புத்தகத்தினை கொண்டாடியவர். சந்திரகுமார் எனும் ஆட்டோ டிரைவரால் எழுதப்பட்ட `லாக்கப்’ புத்தகத்தை படமாக எடுக்கிறார். அது உலக சினிமாவின் முக்கிய இடமான வெனிஸ் திரைப்படவிழாவில் அனைவராலும் எழுந்து நின்று பாராட்டப்படுகிறது.“எங்கிருந்து சொல்லப்படுகிறது” என்ற அவரது வார்த்தைக்கு அது “பாதிப்படைந்த மக்களின் பார்வையில் இருந்து” என்பதை இதன் மூலம் உணரலாம்.

Roots

தன் பெரும்பாலான பேட்டிகளில் இரண்டு புத்தகங்களை குறிப்பிடுவார் ஒன்று Wolf Totem, மற்றொன்று Roots. இதில் Wolf Totem குறித்து நண்பர்களிடம் அதிகமாக பேசி, அதை வாசிக்கக் கூறினால் அது ஆங்கிலத்தில் இருப்பதால் பெரும்பாலான நபர்களால் வாசிக்க இயலவில்லை என்றிருக்கின்றனர். எனவே அதிர்வுகள் என்ற பதிப்பகத்தைத் தொடங்குகிறார். தன் முயற்சியினால் எழுத்தாளர் சி.மோகனை வைத்து Wolf Totem நூலை தமிழில் `ஒநாய் குலச் சின்னம்’ என்று மொழிபெயர்த்து வெளியிட்டார். வெற்றிமாறன் இத்தனை முக்கியத்துவம் கொடுத்த அந்த நாவல் அவரது படைப்புகலில் எத்தகைய பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண முதலில் நாவலின் கதை சுருக்கத்தைப் பார்க்கலாம்.

சீனாவில் புரட்சியை வென்ற மாவோ அடுத்து கலாசார புரட்சி ஏற்படுத்த முற்படுகிறார். அதனால் மங்கோலிய மேய்ச்சல் நில காடுகளுக்குச் செல்லும் அவரது ரெட் ஆர்மி மக்களிடம் நிலவும் பழைமைவாத பழக்க வழக்கங்களை அழிக்கவும், மேய்ச்சல் நிலக் காடுகளை விவசாய நிலமாக மாற்றவும் முற்படுகிறார்கள்.

அந்தப் படையினரில் ஹென் சென் எனும் மாணவனும் இருக்கிறான். அவன் அங்கு இருக்கும் மங்கோலிய பழங்குடியினர், `டேஞ்சூர்’ என ஓநாய்களை மேய்ச்சல் நில காடுகளை காக்கிற குலதெய்வமாக அம்மக்கள் வணங்குவதைப் பார்க்கிறான். ரெட் ஆர்மி அந்த வழிபாட்டைப் பழைமைவாதமாக பார்க்கிறார்கள். இதனால் ஓநாய்கள் வேட்டையாடப்படுகின்றன.

ஓநாய் குலச்சின்னம்

இந்தச் சூழலில் ஹென் சென், “உலகில் நடந்த போர்களுக்கான முடிவுகளையும், உலக வரைப்படத்தையும் “சிறு புல்லும் ஓநாயும்” தான் நிர்ணயம் செய்கிறது” என்ற பில்ஜியினுடைய வார்த்தைகளால்  ஈர்க்கப்படுறான். அதாவது, “இந்த மேய்ச்சல் நிலக் காட்டின் உயிரே புல் என்கிறார். மான்கள், ஆடுகள், குதிரைகள், அணில்கள் இவையாவும் இந்தப் புற்களை தின்கிற வேகத்திற்கு என்றோ இந்தக் காடு அழிந்திருக்கும். ஆனால் ஓநாய்கள் அதைக் கணிசமான அளவுக்கு வேட்டையாடி இந்த காட்டை உயிர்ப்போடு வைத்திருக்கிறது” என்கிறார்.

ஹென் சென்னுக்கு ஓநாய்கள் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. ஓநாயின் குகைக்கே சென்று ஒரு குட்டியை எடுத்து வெளியுலகுக்கு “நாயாக” அதைக் காட்டி வளர்க்கத் தொடங்குகிறான். எதிர்திசையில் மங்கோலிய மேய்ச்சல் நிலக் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட ஓநாய்கள் வேட்டையாடப்படுகின்றன. வளர்க்கப்படும் ஓநாய் ஹென் சென்னின் கையை ஒருநாள் கடித்து விட , இதுபோல கடிக்கக் கூடாது என்று அதன் கூர்மையான பல்லை வெட்டிவிடுகிறான். அதே போல ஓநாய் தனது ஆதி உணர்வை உணர்ந்து, கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியை இழுக்க முற்பட்டு படுகாயம் அடைந்துவிடுகிறது. தான் வளர்த்த ஓநாய் மெல்ல சாகும் நிலையில், மேய்ச்சல் நில காடும் தன் சாவை நெருங்கிக் கொண்டிருக்கும். இனி மருந்து கொடுத்தும் குணப்படுத்த முடியாது, கூர்மையான பல்லை வெட்டியதால் காட்டிலும் விட முடியாது என்கிற கையறு நிலையில், தன் கையாலயே அந்த ஓநாயை கொன்றுவிடுவான் ஹென் சென். கடைசியில் பல வருடங்கள் கழித்து அந்த காட்டுக்கு வருபவன் அது பாலைவனமாக மாற்றப்பட்டதை பார்த்து வருந்தும் சூழலில் நாவல் நிறைவுறுகிறது.

விசாரணை படத்தில் சமுத்திரக்கனி

வலிமை குறைந்தவனாக இருந்தாலும் தன்னை விட வலிமை குறைந்த இன்னொருவனுக்கு அநீதி செய்யக் காத்திருப்பது பற்றிப் பேசுவது இந்த நாவலின் மைய கரு. இந்தக் கருவின் தாக்கத்தை வெற்றிமாறனின் படைப்புகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் பொருத்திப் பார்க்கலாம். ‘வடசென்னை’ படத்தில் தன் அண்ணன் ராஜன் கண் முன் கொல்லப்பட்டாலும், நண்பர்கள் என்ற புள்ளியில் அவர்களை கொள்ளாமல் விடும் டேனியல் பாலாஜி, ‘விசாரணை’ படத்தில் நிரபாரதிகள் என்று காப்பாற்றி வந்த அதே நபர்களை, அரச பயங்கரவாதத்தால் குற்றவாளிகள் என கொல்ல முற்படும் சமுத்திரக்கனி, ‘பொல்லாதவன்’ படத்தில் கொலைகாரனாக இருந்தாலும் அவங்க குடும்பத்தைத் தொடக்கூடாது என்கிற கிஷோர், ‘விடுதலை’ படத்தில் இக்கட்டான சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் சூரி என ‘நல்லவனா-கெட்டவனா’ என்கிற நிறைகுறைகளோடு நிரம்பிய மனித மனங்களைக் காணலாம். இது ஓநாய் குலச்சின்னத்தின் மைய பாத்திரமான ஹென் சென்னோடு பொருந்திப் போகும்.

‘ஆடுகளம்’ படத்தில் சேவல் அடிவாங்கி தத்தளிக்கும் காட்சில் கே.பி கருப்பு சேவலிடம் அன்பும் சோகமும் நிறைந்து பேசும் காட்சி, அப்படியே ஹென் சென் ” குட்டி ஓநாய்! குட்டி ஓநாய்! சாப்பாட்டு நேரம்!” என்று ஓநாயிடம் பேசும் போதும், அதற்கு அடிபடும் போதும் ஹென் சென் கலங்கும் காட்சிகளிலும் ஒத்துப்போகும்மேலும் ஓநாய் குலச்சின்னம் நாவலில் “என் நிலத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத ஒருவன் அழிக்க நினைத்தால் அவனுக்கு எதிராக உயிர் உள்ளவரை  போராடுவேன்” என்று பில்ஜி சொல்வது தான். போராடி தோற்றும் போகிறார். ஆனால் அவரது வழித் தோன்றல்கள் சிறிய அளவிலான மேய்ச்சல் நில காடுகளைக் காப்பாற்றி வைத்திருப்பார்கள் என்று நாவல் முடியும். போலவே, வடசென்னை படத்துக்கு ராஜன் நிலத்துக்குப் போராடுகிற சூழல், அடுத்த தலைமுறையான அன்புவினால் தொடருவதாகப் படம் முடியும். சுருங்கச் சொன்னால் “தோக்குறமோ, ஜெயிக்குறமோ மொதல்ல சண்ட செய்யணும்.”, “நம்மள காப்பாத்திக்குறதுக்கு பேரு ரௌடியிசம்ன்னா ரௌடியிசம் பண்ணுவோம்” என்ற அன்புவின் குரல் பில்ஜியுடையது.

வடசென்னை அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ்

இவ்வாறு அந்த நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரத் தன்மைகள் வெற்றிமாறனின் படைப்புலகில் வரும் பாத்திரங்களோடு பல இடங்களில் ஒத்துபோகிற எண்ணங்கள் தோன்றும்.“ஆதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் இலக்கியங்கள் எனக்குக் கற்றுத் தந்தன” என்கிறார் வெற்றிமாறன். மேலே பார்த்தது போல தான் உள்வாங்கிய படைப்புகளின் மூலம் அதை நிகழ்த்தவும் செய்திருக்கிறார். ஒரு படைப்பு மக்களிடம் சரி, தவறு என்ற எல்லையைத் தாண்டி விவாதிக்கப்பட வேண்டும் .

“கலை, இலக்கியம் என்பது ஒரு கலைஞன் யோசித்திராத விஷயத்தைக்கூட விவாதிக்க வேண்டும்” என்கிறார் வெற்றிமாறன். அந்த வகையில் அவர் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய ஒநாய்க்குலச் சின்னம் புத்தகத்தினை போல, அவரும் தம் படைப்புகளின் மூலம் இவ்வுலகில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறார். “படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து புடுங்க முடியாது சிதம்பரம்” என்பது அந்த தாக்கத்தில் சிறு உதாரணம்.

வெற்றிமாறன்

என்ன புத்தகம் வாசிக்கிறோம், எத்தனை புத்தகம் வாசிக்கிறோம் என்பதைத் தாண்டி படித்ததை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதை ஆதிக்கத்துக்கு எதிராக, பாதிக்கபட்ட மக்களின் பக்கம் நின்று “வெற்றியோ,தோல்வியோ” செல்லுலாய்டின் வழி சண்டை செய்யும் சண்டைக்காரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

வெற்றிமாறனின் படங்களில் உங்களுக்குப் பிடித்த படத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.