குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட தொரைஜாடா கிராமத்தில் சுமார் 80 குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு நடைபாதை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று அடியாக இருந்த நடைபாதை, தற்போது ஒற்றை அடி பாதையாக மாறியும், சேதமடைந்தும் நடக்க முடியாத அளவுக்கு உள்ளது. இதனால், பணிக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “சகதி நிறைந்த நடைபாதையில் குழந்தைகள் சறுக்கி விழுகின்றனர். காலணிகளை அணிந்து சென்றாலும் கால்கள் ஈரமாகி, நோய் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். மாலை நேரங்களில் ஆறு மணிக்கு மேல் இந்த 200 மீட்டர் பாதையை கடக்க பெரும் அச்சம் ஏற்படுகிறது.
எந்த இடத்தில் காட்டெருமை, சிறுத்தை வரும் என்ற அச்சத்திலேயே வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. பள்ளி சென்று திரும்பும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவர வேண்டுமென்றால் தாய், தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பிள்ளைகளை நடுவில் நடக்கவிட்டு, டார்ச் லைட் உதவியுடன் பாதையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் கர்ப்பிணிகள், வயதானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, குறைந்தது 10 பேர் பாதுகாப்பாக பிரதான சாலைக்கு செல்ல வேண்டும். அதேபோல, வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை சுமந்து வருவதற்கும், இரு மடங்கு தொகை செலவாகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு நடைபாதை, தடுப்புச் சுவர், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், எங்கள் பகுதியிலுள்ள 80 வீடுகளுக்கு மட்டும் அடிப்படை வசதிகள் செய்துதர பேரூராட்சி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் குடிநீருக்காக வைக்கப்பட்ட தொட்டி, கொண்டுவரப்பட்டதோடு சரி, அதற்கான குடிநீர் இணைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.
அதேபோல, குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் பயன்படுத்த முடியாதவாறு உள்ளன. அருகில் உள்ள கிணற்றில் இருந்து, தண்ணீரை எடுத்து பயன்படுத்த முடியாத வகையில் பாழடைந்து காணப்படுகிறது” என்றனர். பருவமழை காலங்களில் இப்பாதையை சீரமைக்காவிட்டால், பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் நகர்ப்புறங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமம் ஏற்படும்.
இதை கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தங்கள் பகுதியில் நடைபாதைக்கு மாற்றாக சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கேத்தி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தொரைஜாடா கிராம சாலை மற்றும் இதர தேவைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.