அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் மன்றத்தை நாடி புரட்சிப் பயணத்தை தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற இருந்த முதல்நாள் பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் தனது பயணத்தை தொய்வின்றி தொடர்ந்துள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அடுத்த பிளான்!அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தனக்கான அடித்தளத்தை வலுவாக போட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அடுத்தகட்ட பிளான் என்ன, புரட்சி பயணம் எதற்காக, மக்களவைத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. பாஜகவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து வந்த ஓபிஎஸ் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.
கடைசி வரை பாஜகவை அணுகிய ஓபிஎஸ்கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தனக்கான ஆதரவு வட்டத்தை பெரியளவில் உருவாக்க வேண்டும், அப்போது தான் தன்னை ஒரு தரப்பாக கருதுவார்கள் என்பதால் புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார் ஓபிஎஸ். பாஜகவின் டெல்லி தலைமையை தன் பக்கம் திருப்ப யாரையெல்லாம் அணுக வேண்டுமோ அனைவரையும் அணுகி வருகிறார் ஓபிஎஸ். ரஜினிகாந்த் உடனான சந்திப்பும் அப்படிப்பட்டதே.
டிடிவி தினகரன் வந்த பாதை!இருப்பினும் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்றால் பாஜக எதிர்ப்பு முக்கியம். அதுவும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து வருபவர்கள் திராவிட பாரம்பரியத்தில் நின்று பேசினால் மட்டுமே பெரிய கூட்டத்தை கவர முடியும். டிடிவி தினகரன் ஆரம்பகாலகட்டத்தில் பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டியதாலேயே குறுகிய காலத்தில் தனக்கான கூட்டத்தை உருவாக்கினார். அதன் பின்னர் அவரது நிலைப்பாடுகள் மாறியது தனிக்கதை.
பாஜகவுக்கு நோ சொன்ன ஓபிஎஸ்பாஜக எதிர்ப்பு அரசியலை ஓபிஎஸ் நேரடியாக எடுக்காவிட்டாலும் பாஜக ஆதரவு அரசியலை தொடாமல் இருக்கலாம் என்ற அளவுக்கு வந்துள்ளாராம். அதனாலே காஞ்சிபுரம் அண்ணா இல்லத்திற்கு சென்ற அவர் ‘என்றும் அறிஞர் அண்ணாவின் தொண்டன்’ என்று எழுதியுள்ளார். இதன்மூலம் பாஜக பக்கம் செல்லப்போவதில்லை என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து பன்ருட்டி ராமச்சந்திரன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஓபிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பு!234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில் மக்கள் அளித்த பதிலின் அடிப்படையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம். அதனால் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அதன் பின்னர் தான் எங்கள் அருமை அவர்களுக்கு புரியும். பாஜக பக்கம் நாங்கள் நிற்கப் போவதில்லை. அவர்களே எங்களை கைவிட்டுவிட்டார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
எடப்பாடிக்கு ஷாக்!
மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒருபக்கம், அமமுக ஒரு பக்கம், ஓபிஎஸ் ஒரு பக்கமாக நிற்க, வாக்குகள் சிதறி அது திமுகவுக்கு சாதகமாக அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியே ஏற்பட்டு வந்த நிலையில் அது மேலும் தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.