IND vs NEP: ஒற்றை கையால் கேட்ச் பிடித்து சாதனை பிடித்த விராட் கோலி… என்ன தெரியுமா?

IND vs NEP, Virat Kohli: ஆசிய கோப்பை தொடரில் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா – நேபாளம் அணிகள் இன்று இலங்கையின் கண்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜஸ்பிரித் பும்ரா மும்பைக்கு திரும்பி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஷமி சேர்க்கப்பட்டார். 

 நேபாள அணிக்கு புர்டெல் – ஆசிஃப் சேக் ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை ஷர்துல் தாக்கூர் தகர்த்தார். அதன்பின், சேக் நிதானமாக விளையாடி வந்தாலும், மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஜடேஜாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. 

தொடர்ந்து, சேக் 97 பந்துகளில் 58 ரன்களை எடுத்து சிராஜ் பந்துவீச்சில், ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் சிராஜ் பந்து வீச்சில் சேக்கின் கேட்சை தவறவிட்ட கோலி, இந்த கேட்சை பிடித்து அதை சரிசெய்துகொண்டார் எனலாம். மேலும், இந்த கேட்சை ஒற்றை கையால் பிடித்து கோலி அசத்தினார். 

இதன்மூலம், ஒருநாள் அரங்கில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார். விராட் கோலி இன்று அவரது 277ஆவது ஒருநாள் போட்டியை விளையாடி வரும் சூழலில், 143 கேட்ச்களை பிடித்துள்ளார். குறிப்பாக இந்த கேட்சை பிடித்து ராஸ் டெய்லரை முந்தினார். 

இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் கேப்டன் மகேளா ஜெயவர்தனே 448 ஒருநாள் போட்டிகளில்  218 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளது. ரிக்கி பாண்டிங் 375 போட்டிகளில் விளையாடி 160 கேட்ச்களை பிடித்து இரண்டாமிடத்திலும், முகமது அசாருதீன் 334 போட்டிகளில் 156 கேட்ச்களை பிடித்துள்ளார். 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட ராய் டெய்லர் 236 போட்டிகளில் 142 கேட்ச்களை பிடித்தார்.

தொடர்ந்து, ஆல்-ரவுண்டர் சேமல் காமி 48 ரன்களை எடுத்ததன் மூலம், நேபாளம் 48.2 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஜடேஜா, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம், இந்தியா 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தான் சூப்பர்-4 சுற்றில் தகுதி பெற இயலும். பாகிஸ்தான் ஏற்கெனவே சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இதனால், ஒருவேளை இந்தியா சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெறும்பட்சத்தில் மீண்டும் பாகிஸ்தானுடன் மோதும். கடந்த சனிக்கிழமை இந்தியாவின், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழைக் காரணமாக முடிவின்றி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.