Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்களா?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“ஒழித்துக் கட்டுவேன் என்கின்ற அந்த சொல், இந்து மதத்தின்மீதும், பண்பாட்டின்மீதும் நம்பிக்கை வைத்திருக்கிற மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டித்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் த.மு.எ.க.ச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையாகியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், உதயநிதியின் பேச்சைக் கண்டித்து வருகிறார்கள்.

டெல்லி காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் உதயநிதியைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது எதுவென்பது குறித்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் தன் தாத்தா, தந்தை அரசியல் செல்வாக்கு மூலம் பதவிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், இன்று நாட்டிலே வேற்றுமையைப் பற்றி பேசியிருக்கிற கருத்து மக்களிடத்தில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் கூறியிருக்கிற கருத்துகளை ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடு முழுவதும் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமித் ஷா

ஒருவருக்கு ஒரு கருத்தில், ஒரு மரபில், ஒரு பழக்கவழக்கத்தில் இருக்கிற நம்பிக்கையை `ஒழித்துக்கட்டுவேன்’ என்று ஆணவத்தோடும், அகங்காரத்தோடும் பேசுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது இல்லை. உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கட்சியின் கருத்தாக இருப்பதாக இன்றைக்கு நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்களோ என்று அச்சமடைந்திருக்கிறார்கள்.

`ஒழித்துக்கட்டுவேன்’ என்கிற அந்தச் சொல் இன்று இந்து மதத்தின்மீதும், பண்பாட்டின்மீதும் நம்பிக்கை வைத்திருக்கிற மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏதோ இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரானவர்கள்போல ஒரு மாயத் தோற்றத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். இந்து மதத்தின் மரபுகளையும், கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எல்லோரும் அறிந்தவர்கள் கிடையாது. இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் உண்டா… சனாதனத்தைப் பற்றி பேசியிருக்கிறீர்களே, அதைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிந்தது உண்டா… அவ்வையார் சொன்னதுபோல கற்றது கையளவு, கல்லாதது உலகளவு.

உதயநிதி – Udhayanidhi

ஆனால், உங்களுடைய சொல் ஆணவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது, அது உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசுவதில் நீங்கள் காட்டுகிற ஆர்வம், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் நீங்கள் இருப்பதால், ஊடகங்கள் வெளியிடுவதற்கு தயக்கம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. நீங்கள் எழுதிக் கொடுத்ததை வைத்து பேசினீர்களா… அல்லது சொந்தமாகப் பேசினீர்களா என்பது வேறு. ஆனால், நீங்கள் சொல்லிய அந்தச் சொல் உங்களுடைய தகுதியை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சமூகநீதிக்கு எதிரானது என்று சொல்கிற அந்த நம்பிக்கையை காலம், காலமாக கடைபிடித்து வருகிற மக்களின் நம்பிக்கையை நீங்கள் கொச்சைப்படுத்தி பேசி, அதை ஒழிப்போம் என்று சொல்வது அந்த நம்பிக்கையை ஒழிக்கவா, அல்லது அதை கடைபிடிப்பவர்களை ஒழிக்கவா என்பதுதான் கேள்வியாக உள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

மாற்றிப் பேசி அதற்கு எத்தனை விளக்கங்கள் சொன்னாலும் உங்களுடைய ஆழ்மனதில் இருந்த அந்த கொடூர சிந்தனை வெளிப்பட்டிருக்கிறது. மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசி உங்களை தலைவராக வளர்த்துக் கொள்வதில், அவசரகோலத்தில் அள்ளித் தெளித்த அரைவேக்காட்டுத்தனமாகத்தான் உங்களுடைய பேச்சு உள்ளது.

இது போன்ற பேச்சு தொடருமானால் நாட்டில் வெறுப்புணர்வை, பகைமை உணர்ச்சியை தூண்டுகிற வகையில், வேறுபாட்டை விதைக்கின்ற வகையிலும் உங்கள் பேச்சு அமையுமானால்… ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் உங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், உங்கள் பேச்சையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.