குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழில் இந்திய குடியரசு என்று குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழ் கருத்தை வரவேற்கும் வகையில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றிய குறிப்பிலும், அசாம் முதலமைச்சர் – பாரத் என்றே குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்தியா என்ற வார்த்தைக்கு பதில் பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் .
அந்த வாழ்த்துச் செய்தியில், “தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறமையையும் குணத்தையும் வடிவமைத்து வலிமையான மற்றும் திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய நமது ஆசிரியர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் இக்கட்டான சூழ்நிலைக்கு சென்ற பாஜக – ஜோ. சண்முகசுந்தரம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின்னரே பாரத் – இந்தியா விவகாரம் எழுந்துள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிப்பதற்காக ஆளுநர் ஒரு அழைப்பிதழை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு என்ற குறிப்பிடுவதற்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் இலட்சினையை பயன்படுத்தாமல் மத்திய அரசின் இலட்சினையை பயன்படுத்தியிருந்தார். ஆளுநரின் அறிவிப்புக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் வேறு அழைப்பிதழை அனுப்பினார்.
அந்த சம்பவம் போல் தற்போது இந்தியா என்ற பெயரை பாரத் என்று குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இதற்கும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ஆர்.என்.ரவியை போல் திரௌபதி முர்மு பின்வாங்கி வேறு அழைப்பிதழை அனுப்புவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.