’இந்தியா’ பெயர் மாறுகிறதா? ஜி20 அழைப்பிதழில் ’பாரத்’… வெடித்தது புதிய சர்ச்சை!

தேசிய அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சனாதனம் ஒழிப்பு என்ற விஷயத்தை கையிலெடுத்து பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தது. இந்நிலையில் இன்று நாட்டின் பெயரே பாரத் என்று மாறியது போல் ஒரு விஷயம் அரங்கேறி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள ஜி20 அழைப்பிதழில் வரும் 9ஆம் தேதி இரவு 8 மணிக்கு விருந்து நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பிதழ் தயாராகியுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் (President of India) என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் (President of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் முதல் ஆளாய் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த செய்தி உண்மையாக கூட இருக்கலாம். இனிமேல் இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி ஒன்றில் (Article 1) ”பாரத், முன்பு இந்தியா என்று அழைக்கப்பட்டது. இது மாநிலங்களின் ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறலாம். அடுத்து மாநிலங்களின் ஒன்றியம் என்ற விஷயத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.