பெங்களூரு : ”உதயநிதி பேச்சுக்கு தமிழக மக்களே பதில் கொடுப்பாளர்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சனாதன தர்மத்தை விமர்சித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக பா.ஜ., தலைவர்கள் பலரும் உதயநிதியை திட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறுகையில், ”உதயநிதி பேச்சுக்கு தமிழக மக்களே பதில் கொடுப்பார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என்று கூறினார்.
சிவகுமாரும், உதயநிதியும் லோக்சபா தேர்தலில் ஒரே கூட்டணியில் உள்ளனர். உதயநிதிக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நேற்று கூறியதாவது:
சனாதன தர்மத்தை விமர்சித்து கூறிய உதயநிதி, ஹிட்லர் மனநிலை கொண்டவர். தேர்தலில் ஒரு தரப்பினரை சந்தோஷப்படுத்த இவ்வாறு பேசுகின்றனர்.
இது அரசியல் அமைப்புக்கு எதிரான பேச்சு. அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மனிதனை மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்று சனாதனம் கூறுகிறது. அத்தகைய தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சினால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இந்தியாவில், ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவர், பவுத்தம், சமணம் உட்பட அனைத்து மதத்தினரும் நிம்மதியாக உள்ளனர்.
நம்மை சுற்றி உள்ள அண்டை நாடுகளில் நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதிகார ஆசைக்காக அரசியல் செய்ய கூடாது. இந்திய மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர். தக்க பதிலடி கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூகத்தில் மனிதர்களை சமமான கண்ணியத்துடன் நடத்தப்படாத எந்த தர்மும், என்னுடைய பார்வையில் தர்மம் அல்ல. மனிதனை மனிதனாக மதிக்காத தர்மம், நோயை விட கெட்டது.
பிரியங்க் கார்கே, அமைச்சர், ஐ.டி., – பி.டி., துறை
தமிழக அரசியலில் எப்போதும், ஆரியர் திராவிடர் என்ற பிரச்னையை உருவாக்கி அரசியல் செய்கின்றனர். தி.மு.க., அமைச்சர் சனாதன தர்மத்தை பற்றி கூறியுள்ளார். அந்த கட்சி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் என்ன பதில் சொல்வார்கள்.
நளின்குமார் கட்டீல், மாநில தலைவர், பா.ஜ.,
சனாதன தர்மத்தில், சூத்திரர்களுக்கு படிப்பதற்கு கற்றுகொடுக்கவில்லை. லார்ட் மெகாலே வந்த பின்னர் தான் கல்வி கற்க வழி வகுத்தார், அம்பேத்கர் இல்லை என்றால் ஆங்கிலம் படித்திருக்க முடியாது. சனாதன தர்மத்தை துாய்மைப்படுத்த வேண்டும்.
மஹாதேவப்பா, அமைச்சர், சமூக நலத்துறை
பெஜாவர் மடாதிபதி கண்டனம்
உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் மைசூரில் கூறியதாவது:ஒரு மாநிலத்தின் அமைச்சராக பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற விஷ விதையை சமூகத்தில் விதைத்தது சரியில்லை.சனாதனம் என்பது, சதா காலமும் இருப்பது என்று பொருள். அனைவரும் சுகமாக வாழ்வதற்கு வழி வகுப்பதே தர்மம். நமது சுகத்தினால் அக்கம், பக்கத்தினர் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது. மாறாக, நமது செயல்களால் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.எனவே அத்தகைய சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய அமைச்சரின் மனோபாவத்தை கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்