உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு இந்திய அளவில் விவாதப் பொருளாக உருவெடுத்த நிலையில், அவருக்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லி, பிகார் உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உதயநிதியின் பேச்சு குறித்து அதிமுக தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சனாதன ஒழிப்பு என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்கப்படுகிறது. விலைவாசி, மின் கட்டணம், சொத்து வரி உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் மக்களை திசை திருப்புவதற்காக சனதான ஒழிப்பு என்று பேசியுள்ளார் உதயநிதி.
பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது எதிர்த்து வாக்களித்தது திமுக. சபாநாயகர் தனபாலை தாக்கி மேஜையை, மைக்கை உடைத்து அவரை சட்டையை பிடித்து இழுத்தவர்கள்தான் திமுகவினர். பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். ஊழலை மறைப்பதற்கும் விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இந்த நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இருக்கிறது” என்று கடுமையாக சாடினார்.
சனாதன ஒழிப்பில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, “அதிமுக என்பது மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. இதுகுறித்து ஆழமாக செல்ல விரும்பவில்லை. எங்கள் கட்சித் தலைவர்கள் வழியை பின்பற்றி நடக்கிறோம்” என்றார்.
அமித் ஷா திமுக என்ற உதயநிதியின் விமர்சனம் குறித்து பேசிய அவர், “அதிமுக குறித்து பேசுவதற்கு உதயநிதிக்கு வயது போதவில்லை. ஒவ்வொன்றாக பேசிப் பேசி முன்னிலைப்படுத்திகொள்கிறார். கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதுதான் அவருடைய தகுதி. இதைவைத்துக்கொண்டு தமிழ்நாட்டை ஆட்டிபடைக்க நினைக்கிறார்கள். இது மன்னராட்சி கிடையாது, ஜனநாயக நாடு. வாரிசு அரசியல் செய்வதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்” என்றார்.