சபாநாயகரின் அறிவித்தல்கள்
◾ உயர் நீதிமன்ற தீர்மானம்
அரசியலமைப்பின் 121 (1) யாப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்மானம் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள விடயங்களின் பிரகாரம், சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடுகள் எதுவும் அரசியலமைப்பின் 12 ஆவது யாப்பு அல்லது அரசியலமைப்பின் ஏனைய ஏற்பாடுகளுக்கு முரணனானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதற்கமைய, இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையில் சட்டரீதியாக நிறைவேற்ற முடியும் என அறிவித்தார்.
◾ குழு உறுப்பினர்களின் மாற்றங்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்கள், கௌரவ எஸ். பீ. திசாநாயக்க அவர்கள் மற்றும் கௌரவ தம்மிக்க பெரேரா அவர்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிமல் லான்சா அவர்கள், கௌரவ நாலக பண்டார கோட்டேகொட அவர்கள் மற்றும் கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக அவர்கள் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு செப்தெம்பர் 01 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட அவர்கள் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலிருந்து இராஜினாமா செய்தமையினால் அக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன அவர்கள் அக்குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டு செப்தெம்பர் 01 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் சபாநாயகர் அறிவித்தார்.
◾ ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தும் விடயங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களால் 2023 யூலை 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் என சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களால் 2023 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணையொன்று கொண்டு வரப்படலாம் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.