புதுடெல்லி: ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் மாநிலங்களின் ஒன்றியம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்கான அழைப்பிதழில் ‘President of Bharat’ என அச்சிட்டிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக ‘President of India’ என்றே அச்சிடப்படும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டிருப்பதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “அந்தச் செய்தி உண்மைதான். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9 நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வந்துள்ளது. அதில் வழக்கத்துக்கு மாறாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 1 இனி இந்தியா என்றழைக்கப்பட்ட பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என வாசிக்கப்படும்போல. மாநிலங்களின் ஒன்றியம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “பா.ஜ.க.வின் நாசகார புத்தியால் மக்களை எப்படி பிரிப்பது என்றுதான் சிந்திக்க முடியும். இந்தியர்களுக்கும் பாரதியர்களுக்கும் இடையே மீண்டும் பிளவை உருவாக்குகிறார்கள். நாம் தெளிவாக இருப்போம் – நாம் ஒருவரே! அரசியல் சாசனத்தின் பிரிவு 1, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறுகிறது. இண்டியா கூட்டணியைக் கண்டு அவர்கள் அச்சப்படுவதால் இதுபோன்ற அற்ப அரசியலைச் செய்கிறார்கள். பிரதமர் மோடி, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யுங்கள். ஆனாலும், பாரதம் இணையும்; இண்டியா வெல்லும்” என தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்து: முன்னதாக, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி சக்கல் ஜெயின் சமாஜத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “இந்தியாவுக்குப் பதிலாக பாரத் என்ற சொல்லையே நாம் பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும். மொழிகள் என்னவாக இருந்தாலும் பண்டைய காலம் முதல் பாரத் என்ற பெயர் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறியிருந்து நினைவுகூரத்தக்கது.