ராமநாதபுரம், மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (71). ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காமாட்சி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரின் மனைவி ஆதிலட்சுமி மகளைப் பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு முதியவர் ஒருவர் வந்திருக்கிறார். அவர், “சார், நல்லாருக்கீங்களா, என்னை தெரிகிறதா சார்… நான்தான் உங்களது பழைய மாணவர்” என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/IMG_20230606_WA0019__2_.jpg)
இத்தனை வருடங்கள் கழித்து தனது மாணவன் தன்னை வந்து சந்திப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த காமாட்சி, வீட்டுக்குள் அழைத்து அன்பாகப் பேசியிருக்கிறார். அப்போது குடிக்க தண்ணீர் கிடைக்குமா என கேட்கவே, “ரொம்ப வருஷம் கழிச்சு என்ன தேடி வந்துருக்க இரு, நான் கடைக்குப் போய் கூல்டிரிங்ஸ் வாங்கி வருகிறேன்” என அருகிலுள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தபோது வீட்டிலிருந்து அவசரமாக வெளியே வந்த முதியவரைப் பார்த்த காமாட்சி, “ஏம்ப்பா இவ்ளோ அவசரமா கிளம்புற?” எனக் கேட்டிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/IMG_20230905_191448.jpg)
அப்போது அவர் மற்றொரு மாணவர் வந்து கொண்டிருக்கிறார். அவரையும் அழைத்து வருகிறேன் எனக் கிளம்பியிருக்கிறார். முதியவர்மீது சந்தேகமடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.22,000 பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது மாணவர் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து பணத்தைத் திருடிச் சென்ற முதியவர் குறித்து காமாட்சி ராமநாதபுரம் பஜார் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெரிய பட்டணத்தைச் சேர்ந்த சீனி நூர்தீன் (62) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் மாணவர் எனக் கூறி ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டுக்குள் நுழைந்து மர்மநபர் ரூ.22,000 பணத்தை திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.