சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், “செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் பெற்றோர்களுக்கு அன்பான ஆசிரியர் தின வாழ்த்துகள்… தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “என் வெற்றியின் பெருமைகளை எல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டு,
என் தோல்விகளில் மட்டும் பங்கெடுத்து, என் தவறுகளை அன்போடும், கண்டிப்போடும் சுட்டிக்காட்டிய என் ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தினத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது மாணவச் செல்வங்களின் இரண்டாம் பெற்றோர்களாக விளங்கும் ஆசிரிய பெருமக்களுக்கு அன்பான ஆசிரியர் தின வாழ்த்துகள்! ” என்று தனது ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.