சந்திரயான் – 3 திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் திட்ட இயக்குநராக இருந்து செயல்பட்டவர் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல். இந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வீரமுத்துவேலின் வீட்டிற்குப் பல முக்கியத் தலைவர்கள் நேரில் வந்து அவரின் தந்தை பழனிவேலிடம் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வரிசையில் நேற்றைய தினம் தன் குடும்பத்தாருடன் விழுப்புரம் வந்திருந்த திரைப் பிரபலம் ரோபோ சங்கர், வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு அற்புதமான விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்கள். ஒரு தமிழனாக, அதுவும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானியாக இருக்கக்கூடிய அவர், இஸ்ரோவில் சந்திரயான் – 3 திட்டத்திற்கு இரவு பகலாக உழைத்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஒரு மாபெரும் விஞ்ஞானி. அதுவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கக்கூடிய விழுப்புரம் மாவட்டத்தை இன்று உலகமே திரும்பிப் பார்க்கும்படி வைத்திருக்கிறார். அவருடைய இல்லத்தில்தான் தற்போது இருக்கின்றோம். வீரமுத்துவேல் அவர்கள் விழுப்புரத்தில் இல்லை, பெங்களூரில் இருக்கிறார். அதனால் அவரின் தந்தையாரை நாங்கள் குடும்பத்தோடு வந்து சந்தித்துவிட்டு, அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்கிறோம்.
வந்தவுடனே ‘சாப்பிட்டீர்களா…’ என்று கேட்டார். சாப்பிட்டால் வயிறுதான் நிறையும். அவருக்குச் செய்த சிறு மரியாதையால் நாங்கள் மனசு முழுக்க நிறைந்து போகின்றோம். ஐயா அவர்கள் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான மகனைப் பெற்றெடுத்தது விழுப்புரம் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை. அவருடைய இல்லத்தில் எங்கள் பாதம் பட்டதற்கு நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 10 வருடத்தில் ‘போதை’ என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும். அதற்காக தமிழக அரசு முழுமையான நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் காவல்துறையும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் நானும் கலந்துகொள்கிறேன். கூடிய சீக்கிரமாக ‘போதை’ என்ற வார்த்தையை அகராதியிலேயே இல்லாத அளவிற்கு தமிழக அரசு கொண்டுவந்துவிடும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பை பொதுமக்களும் பெற்றோர்களும் தர வேண்டும். அதை முன்னெடுக்கக்கூடிய போலீஸார் மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என என்னைக் கேட்டால்… நான் சொல்வேன், ’நான்தான் சூப்பர் ஸ்டார்’ என்று. என்னை விடுங்கள், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எனக் கேட்டால், வீரமுத்துவேல் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். இதைவிட ஒரு பெருமை என்ன இருக்கிறது. அப்துல்கலாம் ஐயா அவர்கள் வாழ்ந்த நாள்களில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை. அவரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. அவருடைய நகலாக முத்துவேல் மற்றும் அவர்களின் தந்தை பழனிவேலை இன்று நாம் பார்க்கின்றோம். ரியல் சூப்பர் ஸ்டார் இவர்கள்தாம். வருங்கால பள்ளி, கல்லூரி, மாணவர்களைப் பார்த்து… ‘நீ என்னவாக ஆகப்போகிறாய்..?’ என்று கேட்கும் பொழுது, ’விழுப்புரம் வீர முத்துவேல் ஐயா போல இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்போம்’ என அவர்கள் சொல்ல வேண்டும். அதுதான் எங்களின் ஆசை” என்றார் நெகிழ்ச்சியுடன்.