"பறக்க கற்றுக்கொடுத்தற்கு நன்றி மேடி"- இறுதிச்சுற்று உருவான பயணம் குறித்து சுதா கொங்கராவின் பதிவு

கடந்த வாரம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ படம் திரையிடப்பட்டது.

கொட்டி தீர்த்த மழையிலும் மக்கள் நனைந்தப் படி இப்படத்தை பார்த்துக் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் பயணம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா ட்விட்டரில் உருக்கமான பதிவினைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “ இந்தப் படத்தின் பயணத்தை தற்போது நினைவு கூறுகிறேன்.  எனது முதல் படம்  ‘துரோகி’. கிடைத்த வாய்ப்பை சரியாகப்  பயன்படுத்தி அப்படத்தை சிறப்பாக எடுக்கவில்லை என்று உண்மையிலேயே நான் வெட்கப்பட்டேன். அந்த சமயத்தில் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்றுகூட  நினைத்தேன்.  பிறகு இறுதிச்சுற்று படத்தை பற்றி மாதவனிடம் சொன்னப்போது அவர்தான் எனக்கு ஊக்கமளித்தார்.

மாதவன்

உன் இடத்திற்கு வந்து 4 வரி கதையை சொன்னது ஞாபகம் இருக்கிறதா மேடி?  ஏழு மாதங்கள் படத்திற்கான கதையை எழுதினேன்.  உனக்கு இந்த கதை பிடித்திருக்கிறது என்றும் நீயே இதில் நடிப்பதாகவும் சொன்னாய்.  அப்போது ஒரு போர் தொடங்கியது. எந்த ஒரு  தயாரிப்பாளரும் இப்படத்தினை தயாரிக்க முன்வரவில்லை. எந்த நடிகையும் இதில் நடிக்கவும் தயராக இல்லை.

எனக்கு சில தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததால் இந்த கதையை உனக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நல்ல இயக்குநரை தேடு என்றேன்.  அப்போது நீ இந்த படத்தை இயக்கவில்லை என்றால் வேறு யாருடனும் இந்த படத்தை உருவாக்க எனக்கு விருப்பமில்லை என்று சொன்னாய்.  பல்வேறு விமர்சனங்கள்  இந்த படத்தின் மீது முன்வைக்கப்பட்டது. படத்தின் டைட்டில் சரியில்லை.

முதல் காட்சி சரியில்லை. பிரபலமான நடிகையைத் தேர்ந்தெடு, இந்த படம்  ஹிந்தியில் வெற்றிபெறும். தமிழில் நல்ல வரவேற்பைப் பெறாது போன்ற எண்ணற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீ மிகச்சிறப்பாக சினிமாவை உருவாக்குகிறாய் சுதா, எது சரியன்று உன் மனதுக்கு தோன்றுகிறதோ அதை மட்டும் செய்.

நான் உன்னுடன் இருக்கிறேன் என்று நீ மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருந்தாய் மேடி.  நம்முடன் நின்ற ஒரே மனிதர் தயாரிப்பாளர் சசி மட்டுமே.

இறுதிச்சுற்று

இப்படி உருவான படத்தை  மக்கள் மழையில் நனைந்தபடி  மதியையும், பிரபுவையும் கொண்டாடுகின்றனர். இதை பார்க்கும்போது ஒன்றே  ஒன்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பறக்க கற்றுக்கொடுத்தற்கு நன்றி மேடி.  எவ்வித தடையும் இன்றி  பறக்க விட்டதற்கு நன்றி சசி.  தோல்விப் படம் கொடுத்த பெண் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இல்லையென்றால் இந்த இயக்குநர் பிறப்பதற்கு முன்பே இறந்திருப்பாள்” என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.