பாகிஸ்தானில் கடந்த மாதம் வன்முறை காரணமாக ஏராளமான சர்ச்சுகள் எரிக்கப்பட்டதற்கு, மத நிந்தனை புகார் காரணமல்ல; தனிப்பட்ட விரோதமே காரணம் என அந்த நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்பவர் இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானின் சில பக்கங்களை கிழித்து எரிந்ததாக புகார் எழுந்தது.
இது மத நிந்தனை குற்றச்சாட்டாக வடிவமெடுத்ததை அடுத்து, கடந்த 16ம் தேதி ராஜா அமிர் உட்பட ஏராளமான கிறிஸ்துவர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன; சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. இதில் பெரிய தேவாலயம் உட்பட 17 தேவாலயங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.
பல இடங்களில் கிறிஸ்துவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் பைசலாபாத் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த விவகாரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உயிரிழப்பு எதுவும் இல்லாவிட்டாலும் அந்நாட்டில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் பெரும் அதிர்ச்சியை எழுப்பியது.
இது தொடர்பாக நடத்தப்பட விசாரணையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத நிந்தனை காரணமல்ல என தெரிய வந்துள்ளது. இது குறித்து பாக்., போலீஸ் மூத்த அதிகாரி கூறியதாவது:
ராஜா அமிருக்கு தன் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக கருதிய பர்வேஸ் கொடு என்பவர் ராஜா வீட்டில் புனித நுாலை வீசி எறிந்துள்ளார். இதனால் ராஜா அமிருக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள் மத நிந்தனை புகார் காரணமாக அவரது வீடு மற்றும் சர்ச்சுகளை சேதப்படுத்தினர்.
உண்மையில் மத நிந்தனை புகார் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. உரிய விசாரணைக்குப் பின் இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பர்வேஸ் கொடுவை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement