சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சைகளும், இந்தியா – பாரத் என்ற பெயர் சர்ச்சைகளும் இன்று இந்திய அரசியல் களத்தில் அதிகளவில் எதிரொலித்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் சனாதன முறைக்கு எதிராக பேசிய விவகாரம் வட இந்தியாவில் அனலைக் கிளப்பி வருகிறது. உதயநிதியின் பேச்சை திரித்து வீடியோக்கள் பரவிய நிலையில் திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வட இந்தியாவில் கிளம்பின. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியதால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளே தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
உதயநிதிக்கு எதிராக சட்ட ரீதியாக புகார் அளிப்பது, அவரது தலைக்கு ரூபாய் 10 கோடி தருவதாக சாமியார் ஒருவர் அறிவித்தது என தொடர்ந்து அந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி வருகிறது.
திமுகவினரும் அந்த சாமியாரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்தியா கூட்டணி பாஜகவில் பயப்பட வைத்துள்ளது – உதயநிதி
இது ஒருபுறமிருக்க இந்தியா என்ற பெயரை மாற்றி பாரத் என்று குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் அழைப்பிதழ் அனுப்பிய நிலையில் அதுவும் இன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாரத் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.
அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.