இந்திய அரசியல் களம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அது 2024 மக்களவை தேர்தல் மட்டுமா? இல்லை அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களும் ஒன்றாக வருகின்றனவா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. இதற்கான வேலைகளில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு, 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகியவை மிகுந்த கவனம் பெறுகின்றன.
பிரசாந்த் கிஷோர் கருத்துஇந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், பிகார் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர களப் பணியாற்றி வருபவருமான பிரசாந்த் கிஷோர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதாவது, நல்ல நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்டால் வரவேற்பேன். 17 – 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் பேசுகையில், தேர்தல் செலவீனங்கள் பெரிதும் குறையும்.ஒரே இரவில் மாற்றம்அடிக்கடி தேர்தல் என்று வந்துவிட்டால் அரசை நடத்துவது சிக்கலாகி விடும். இதற்காக நேரம் விரயம் ஏற்படும். எனவே ஒரே தேர்தலாக அமைந்து விட்டால் சிறப்பாக இருக்கும். மக்களும் ஒரே ஒரு முறை தீர்ப்பை எழுதி விடுவார்கள். அதேசமயம் ஒரே இரவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் சிக்கலாகி விடும். பாஜகவிற்கு எதிர்வினையாக கூட மாறலாம் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பதிலடிஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழங்கி கொண்டிருக்கும் சூழலில், பிரசாந்த் கிஷோரின் கருத்து இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. நேர்மையான அரசியலை தருகிறேன் என்று பிகாரில் நடைபயணம் சென்று கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் யார் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தேர்தல் வெற்றிக்கு வியூகம்குறிப்பாக பிகாரில் உள்ள ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை பிரசாந்த் கிஷோருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். பிரசாந்த் கிஷோரை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்காக பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பணியாற்றியுள்ளார். கடைசியாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக செய்திகள் அடிபட்டன.
டார்கெட் நிதிஷ் குமார்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் சில திட்டங்களை அக்கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் கடைசி நேர திருப்புமுனையாக எல்லா திட்டங்களும் தலைகீழாக மாறின. காங்கிரஸில் இணையும் முடிவை பிரசாந்த் கிஷோர் கைவிட்டு விட்டார். காங்கிரஸ் சேர்த்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். தற்போது இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் குமாரை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
பாஜக ஆதரவு நிலைப்பாடு?மேலும் பாஜகவை வீழ்த்த வலுவான முன்னெடுப்புடன் வருமாறு எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து கூறி வந்தார். இதனால் பாஜகவிற்கு எதிரான கள அரசியலை கையிலெடுப்பாரோ? என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் ஆதரவு கருத்தை கூறி ஒட்டுமொத்த கணக்கையும் தூள் தூளாக்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.