தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் பத்தே நாள்களில் (செப்டம்பர் 15) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பெண்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இதன் மூலம் அரசுக்கு செலவாகும். இவ்வளவு பெரிய திட்டம் தமிழ்நாட்டில் இதற்கு முன் செயல்படுத்தப்பட்டதில்லை.
பயனாளர்கள் பட்டியல் நிறைவு!சுமார் 2 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களிலிருந்து ஒரு கோடி பெண்களை மட்டும் தேர்வு செய்து திட்டத்தின் பயனாளர்களாக இணைப்பது என்பது மிகவும் சவாலான பணி. அந்த பணியை தமிழக அரசு பல்வேறு துறைகளின் உதவியுடன் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளது. பயனாளர்களை இறுதி செய்யும் பணி நிறைவடைந்து அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
நிராகரிக்கப்பட்டவர்கள்!தமிழக அரசின் சார்பில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற விண்ணப் பதிவு முகாம்கள், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு முகாம் ஆகியவை மூலம் சுமார் ஒரு கோடியே 63 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்கள் சரிபார்ப்பு, கள ஆய்வு ஆகியவை மூலம் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலும் எடுக்கப்பட்டது.
ஸ்டாலின் அறிவித்த தளர்வு!விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்ப முகாம்கள் நடைபெற்று வந்த போதே தமிழக அரசு இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் ஆகியவை பெறும் குடும்பத்தினர் தகுதிப் பட்டியலுக்குள் வர மாட்டார்கள் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இவர்களும் தகுதியானவர்கள் பட்டியலில் வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
வங்கிக் கணக்கு விவரங்கள்!அதேபோல் அரசு அறிவித்த தகுதிப் பட்டியலில் ஒரு கோடி பேருக்கும் அதிகமானோர் வந்தால் அனைவருக்கும் வழங்கப்படுமா அல்லது ஒரு கோடி பேர் என்ற அளவில் அரசு கறாராக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த சந்தேகத்துக்கும் பதில் அளித்தார். இந்நிலையில் தகுதிவாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் பணிகள் இன்றோடு நிறைவு பெறுகின்றன. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்டு தரவு தளத்தில் ஏற்றப்பட்டு வருவதாக கூறுகின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.