புதுடெல்லி: 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு கடன் வழங்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் (யுஐடிஎஃப்), 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான முதல்கட்ட கடன் தவணை விரைவில் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலங்களும் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 லட்சம் முதல் 9,99,999 மக்கள் தொகையுள்ள 2 அடுக்குப் பிரிவில் இடம்பெற்றுள்ள 459 நகரங்களுக்கும், 50,000 முதல் 99,999 மக்கள் தொகை கொண்ட 3 அடுக்கு பிரிவில் 580 நகரங்களுக்கும் உள்கட்டமைப்பு கடன் மிக குறைந்த வட்டியில் வழங்கப் படவுள்ளது.
செப்டம்பருக்குள்… இந்த கடன் தொடர்பான வழிகாட்டுதல்களை, திட்டத்தை செயல்படுத்தும் தேசிய வீட்டு வசதி வங்கி (என்எச்பி) கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. மேலும், செப்டம்பர் மாதத்துக்குள் மாநிலங்கள் தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அந்த வங்கி கேட்டுக் கொண்டது.
என்எச்பி வழிகாட்டுதலின்படி 2, 3 அடுக்கு நகரங்கள் தற்போதைய வங்கி வட்டி விகிதத்தை விட 1.5 சதவீதம் குறைவான வட்டியில் உள்கட்டமைப்பு கடன்களைப் பெறலாம்.
நீர் வழங்கல், சுகாதாரம், சாலைகள் அமைத்தல், நெரிசல் குறைப்பதற்கான திட்டமிடல், நகர திட்டமிடல், திறந்த உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்களுக்கு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.