வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது

பீஜிங்,

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின் 32-வது பகுதி கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. 4 ஆயிரம் மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று.

கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்த நிலையில், வடக்கு ஷாங்சி மாகாணத்தில் யாங்கியான்ஹே நகர பகுதியில் உள்ள சீன பெருஞ்சுவரின் ஓரிடத்தில் இடைவெளி காணப்படுகிறது.

இதனை எவரோ சிலர் சேதப்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, யூயு கவுன்டி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றிய விசாரணையில், 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் என இருவர் அதனை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

அந்த பகுதி வழியே கடந்து செல்வதற்காக, அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். இதில், ஓட்டை போட்டுள்ளனர் என்றும் பராமரிப்பு செய்து அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுவரின் குறிப்பிட்ட பகுதியின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதுபற்றி அவர்கள் இருவரையும் பிடித்து சென்று, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.