100 குடும்பங்களுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'குஷி'. படம் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒன்றை படக்குழுவினர் நேற்று நடத்தினர். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, “குஷி' படத்தில் நான் சம்பாதித்ததில் 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். உங்களால்தான் நானும் சம்பாதிக்கிறேன். எனது சமூக வலைத்தளத்தில் விண்ணப்பம் ஒன்றை வெளியிட உள்ளேன். அதை விண்ணப்பிப்பவர்களில் 100 பேரைத் தேர்வு செய்து வழங்க உள்ளேன். அதன் மூலம் அவர்களது வாடகை, பீஸ் ஆகியவற்றைச் செலுத்தினால் எனக்கு மிகவும் சந்தோஷம். அப்படி செய்தால்தான் எனக்கு 'குஷி' வெற்றி பெற்றது ஒரு பூர்த்தியைத் தரும்,” என ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிவித்தார்.
படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளரிடமிருந்து கார்களைப் பரிசாகப் பெறும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு மத்தியில், தான் சம்பாதித்த ஒரு சில கோடிகளில் இருந்து மக்களுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டாவின் எண்ணம் பாராட்டுக்குரியது.