புதுடில்லி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் உட்பட 75 பேருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுடில்லியில் நேற்று விருது வழங்கி கவுரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை நாடு முழுதும் தேர்வு செய்து, தேசிய நல்லாசிரியர் விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதன்படி, நாடு முழுதும் 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த, 12 ஆசிரியர்கள் என மொத்தம், 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.
இவர்களில், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் வீரகேளம்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் அடங்குவர்.
புதுடில்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:
நாட்டின் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது ஆசிரியர்கள் தான். ஒவ்வொரு மாணவ – மாணவியருக்கும் தரமான கல்வி வழங்குவதே அவர்களின் பணியாக இருக்க வேண்டும். இதை தான், புதிய தேசிய கல்வி கொள்கையும் வலியுறுத்துகிறது.
மாணவர்களின் உன்னதமான திறனை வெளிக்கொண்டு வருவதில், ஆசிரியர்கள் போக பெற்றோரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியர்களின் மீது நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். அதேபோல ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அறிவை போதிப்பதுடன், அன்பு மற்றும் அரவணைப்பையும் வழங்குவது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்