இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800′ திரைப்படம் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ளது.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து, கடும் கண்டங்களுக்குப் பிறகு ‘நன்றி வணக்கம்’ என்று கூறி விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியது எல்லோரும் அறிந்ததே.

இதற்கு முக்கியக் காரணம், ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் போராளிகளை விமர்சித்து வெளிப்படையாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன். எனவே, முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலரும் முத்தையா முரளிதரனை ‘சிங்களர்களின் அடிவருடி. தமிழன் இல்லை, தமிழனத் துரோகி’ என்று விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று வெளியான ‘800’ திரைப்படத்தின் ட்ரெய்லரில், “நான் என்னைத் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை. நான் கிரிக்கெட்டர்” என்று முத்தையா முரளிதரன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தவிரப் படத்தில் முத்தையா முரளிதரனின் ஆரம்பக் கால வாழ்க்கை, பௌலிங் ஆக்ஷன் சர்ச்சையால் தடை, பின்னர் அந்தத் தடையிலிருந்து மீண்டு வந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தமிழீழப் போராளிகளை முரளிதரன் சந்தித்ததாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் விரைவில் திரையைக் காணவிருக்கிறது.