Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்து சூப்பர்-4 சுற்று நாளை (செப். 6) தொடங்க உள்ளது. இன்றைய கடைசி குரூப்-சுற்று போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில், இலங்கை அணி வங்கேதச அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் குரூப் பி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திடம் தோல்வியுற்று கடைசி இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி, தோல்வியின் மூலம் எந்த அணி சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்பது தெளிவடையும். குரூப் ஏ-வில் பாகிஸ்தான், இந்தியா அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை முதலில் வீழ்த்தியிருந்தது.
பாகிஸ்தான், இந்தியா முன்னேற்றம்
பின்னர், இந்தியா – பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழைக் காரணமாக முடிவின்றி ரத்தானது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இந்தியா – நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா டக்-வொர்த் லீவிஸ் முறைப்படி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றும் போட்டியை மழை அடிக்கடி குறுக்கிட்டது. ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும், இந்தியா இரண்டாமிடத்தையும் பிடித்தன.
மீண்டும் மோதல்
அதன்படி இந்தியா – பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்றில் மீண்டும் ஒருமுறை மோத உள்ளது. வரும் செப். 10ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் விளையாட உள்ளன. குரூப் சுற்று போட்டி மழை காரணமாக ரத்தானதே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்த நிலையில், முக்கியமான சூப்பர்-4 சுற்று போட்டியும் மழையால் தடைப்பட்டால் மீண்டும் ஏமாற்றமடைய சூழல் ஏற்படும் என ரசிகர்கள் கருத்து வருகின்றனர்.
வேறு இடத்திற்கு மாற்றம்?
அதுமட்டுமின்றி, இலங்கையில் மட்டுமே மழை பெய்து வருவதால், போட்டியை பாகிஸ்தானுக்கே மாற்றும்படி கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பாகிஸ்தானில் விளையாட அனுமதி கிடைக்காது என்பதால், இலங்கையிலேயே மழை வராத வேறு இடங்களுக்கு போட்டியை மாற்ற தற்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து கலந்தாலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஒருவேளை போட்டி கொழும்பிவிலேயே நடைபெற்று, மழையால் போட்டி தடைப்பட்டால் என்ன நடக்கும் எனவும் ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
ரிசர்வ் டே
ஆனால், அப்படி நடந்தால் சூப்பர்-4 போட்டி அடுத்த நாளுக்கு தள்ளிவைக்கப்படும் என கூறப்படுகிறது. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு போட்டிக்கும் இடையில் ஒருநாள் இடைவெளி இருப்பதால் போட்டி தடைப்பட்டாலும் அடுத்த நாள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப். 10ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது. அடுத்த போட்டி செப். 12ஆம் தேதி தான் நடைபெறுகிறது என்பதால், செப். 11ஆம் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ஆக இருக்கும்.
மேலும், செப். 14ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கும் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் இடையிலான போட்டிக்கும், அடுத்த போட்டிக்கும் இடைவெளி இல்லாததும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, ஆட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், இன்று உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதால், ரசிகர்கள் அந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Asia Cup 2023: சூப்பர்-4 சுற்று அட்டவணை
செப்டம்பர் 6: பாகிஸ்தான் vs B2, லாகூர், பாகிஸ்தான், பிற்பகல் 2:30
செப்டம்பர் 9: B1 vs B2, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி
செப்டம்பர் 10: பாகிஸ்தான் vs இந்தியா, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி
செப்டம்பர் 12: இந்தியா vs B1, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி
செப்டம்பர் 14: பாகிஸ்தான் vs B1, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி
செப்டம்பர் 15: இந்தியா vs B2, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி
செப்டம்பர் 17: இறுதிப்போடி கொழும்பு, இலங்கை, பிற்பகல் 3 மணி
மேலும் படிக்க | இலங்கையில் தொடர் மழை! ஆசிய கோப்பையில் ஏற்படப்போகும் மாற்றம்!