ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope).
அன்று
1816-ம் வருடம் செப்டம்பர் மாதம் 16ம் நாள். இலையுதிர்காலத்தின் சில்லென்ற ஒரு மாலை வேளையில், பிரான்ஸின் அழகிய வீதியொன்றின் ஓரமாக ஓர் அழகான வாலிபர் வாக்கிங் சென்றுகொண்டு இருக்கிறார். அப்போது வீதியின் ஒரு பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் அவர் கவனத்தை ஈர்க்கிறார்கள். ஒரு சிறுவன் ஒரு பெரிய நீண்ட மர உருளையை எடுத்து அதன் ஒரு முனையில் குண்டூசியால் கீறி ஒலி எழுப்ப, இன்னொரு சிறுவன் அதன் மறு முனையில் காதை வைத்தபடி கேட்டுக்கொண்டு இருந்தான். இந்த விளையாட்டைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்ற அந்த மனிதரின் எண்ணத்தில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் ஒரு கண்டுபிடிப்புக்கான ஐடியா உதிக்கிறது. அந்த மனிதர் டாக்டர் ரென்னே லென்னக் (René Laennec) என்ற பிரெஞ்சு மருத்துவர். அவர் கண்டுபிடித்த அந்தப் பொருள் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope) எனப்படும் இதயத்துடிப்பு மானி.
அதுவரை நோயாளிகளின் இதயத்துடிப்பை, அதிலும் குறிப்பாகப் பெண்களின் இதயத்துடிப்பைச் சோதனையிடுவது அவருக்குப் பெரிய சவாலாக இருந்தது. நோயாளியின் நெஞ்சில் அழுத்திக் காதை வைத்துத்தான் லப்டப் ஒலியைக் கணிக்க வேண்டியிருந்தது. பெண்களிடம் இந்தச் சோதனையைச் செய்வது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாகக் கொஞ்சம் உடல் எடை கூடிய பருமனான பெண்கள் என்றால் இன்னும் கஷ்டமாக இருந்தது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வழி, அந்தத் தெருவில் பார்த்த சிறுவர்களின் விளையாட்டின் மூலம் அவருக்குக் கிட்டியது.
மேற்கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியவர், 1819-இல் 3.5cm விட்டமும் 25cm நீளமும் கொண்ட ஒரு காதை மட்டும் வைத்துக் கேட்கக்கூடிய மரத்தாலான ஒரு ஸ்டெதாஸ்கோப்பை உருவாக்குகிறார். எலும்பும் சதையும் கொண்டு, தோலால் போர்த்தப்பட்ட மனித உடலின் சிம்பொனியையும், அதனுள் புதைந்திருக்கும் எண்ணற்ற மர்மங்களையும் கண்டறிய, உலகின் முதல் ஸ்டெதாஸ்கோப் பிறக்கிறது! அதை சுகப்பிரசவமாகப் பெற்றெடுத்த பெருமை ஐரோப்பியர் வசமாகிறது.
லென்னக்கின் கண்டுபிடிப்பு சமூகத்தில் வேகமாகப் பரவி, மருத்துவத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. ஆரம்பக்கால ஸ்டெதாஸ்கோப்புகள் ஒரு மருத்துவக் கருவியை விட ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோலைப் போன்ற எளிமையான மரக் குழாய்களாகவே இருந்தாலும் அவற்றின் தாக்கம் என்னவோ மாயாஜாலத்திற்குச் சற்றும் குறைவாக இருக்கவில்லை.
அதன் பின் அயர்லாந்து மருத்துவர் ஆர்தர் லியார்ட் 1851ல் கட்டா-பெர்ச்சா எனப்படும் உறுதியான பிளாஸ்டிக் பொருளால் உருவாக்கப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். 1851ல் ஜார்ஜ் பிலிப் கம்மன் என்ற ஓர் அமெரிக்க மருத்துவர், இரண்டாவது இயர்பீஸைச் சேர்ப்பதன் மூலம் பைனரல் ஸ்டெதாஸ்கோப்பை உருவாக்கி, லானெக்கின் வடிவமைப்பைச் செம்மைப்படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு உள் ஒலிகளைக் கேட்பது மற்றும் ஒலிகளை வேறுபடுத்துவது போன்ற திறன்களை மேம்படுத்தியது. தனது கண்டுபிடிப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவர் இதற்குக் காப்புரிமையே கோரவில்லை.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தந்தம், வெள்ளி மற்றும் ரப்பர் போன்ற பொருள்களால் ஸ்டெதாஸ்கோப்கள் தயாரிக்கப்பட்டன. 20-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் வருகையுடன், ஒரு காலத்தில் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட நோய்களுக்கான தடயங்களைத் திறந்துவைக்கும் சாவியாக ஸ்டெதாஸ்கோப்கள் மாறின.
அதன் பின் மிகப் பிரபலமான ராப்பாபோர்ட் அண்டு ஸ்ப்ராக் ஸ்டெதாஸ்கோப் (Rappaport and Sprague Stethoscope) 1945ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பக்கம் சுவாச அமைப்புக்காகவும், மற்றொன்று இருதய அமைப்புக்காகவும் என இரண்டு பக்க Chestpiece-ஐ இணைத்த இதில் ஒன்று இதயத்தையும் மற்றொன்று நுரையீரலையும் சோதிக்கப் பயன்பட்டது. 1961ல் டாக்டர் டேவிட் லிட்மான் என்பவர் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு துல்லியமாக இதய ஒலியைக் கேட்க முடிந்த ஒரு எளிமையான ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். 1970களில் உள் உடல் செயல்பாடுகளின் ஒலியை அதிகரிக்க மின்னணு பெருக்கத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெதாஸ்கோப்புகள் வெளிவரத் தொடங்கின.
இன்று
கறுப்பு கோட்டு போட்டால் வக்கீல், வெள்ளைச் சட்டை போட்டால் அரசியல்வாதி, பெரிய மீசை இருந்தால் போலீஸ் என்பது போலக் கையில் ஸ்டெதாஸ்கோப் இருந்தால்தான் டாக்டர் என்று சமூகம் நம்பும் அளவுக்கு டாக்டர்களும் ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒன்றாகப் பிணைத்து விட்டனர். சொல்லப்போனால் ஒரு வைத்தியர் தனது 5 வருடப் படிப்பை முடித்து, வைத்திய பயிற்சி பெற்றதற்கான ஒரே அடையாளமே அவர் கைகளில் கொடுக்கப்படும் அந்த ஸ்டெதாஸ்கோப்தான். அன்று இரு சிறுவர்களின் விளையாட்டைப் பார்த்து மரக் குழலில் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப், இன்று 50 அடி தூரத்தில் தள்ளி நின்று நோயாளியின் இதயத்துடிப்பைக் கணிக்கும் புளூடூத் டெக்னாலஜி வரை அப்டேட் ஆகியுள்ளது.
20ம் நூற்றாண்டு வரையிலுமே ஸ்டெதாஸ்கோப்புகள் என்றால் என்ன என்று கேட்டால் “நம் இதயத்துடிப்பைக் கேட்க மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி” என்று சொல்லியிருப்போம். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றத்தில் ஸ்டெதாஸ்கோப்புகள் அதன் அடுத்த தளத்துக்கு நகர்ந்தன. இன்று ஸ்டெதாஸ்கோப்புகள் இதய ஒலியை மட்டுமல்ல, நுரையீரல், சுவாசம், மற்றும் குடல்களின் ஒலியையும் ஏன் ரத்த ஓட்டத்தையும் கூட அவதானிக்கப் பயன்படுகின்றன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஸ்டெதாஸ்கோப்புகள், மிகவும் துல்லியமான கணிப்பையும், குறைந்த நேரத்தில் சிறந்த அவதானிப்பையும் சாத்தியப்படுத்தின. ஆடியோ தரம், ஒலியை அதிகரித்துக் கேட்கக்கூடிய வசதி, தேவையில்லாத ஒலிகளை பில்டர் செய்யும் வசதி போன்ற கூடுதல் அம்சங்களால் டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப்புகள் பாரம்பரியமாகப் பல வருடங்கள் பாவனையிலிருந்த அனலாக் ஸ்டெதாஸ்கோப்புகளைப் பின் தள்ளிப் பிரபலமாயின.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட திங்க்லேப்ஸ் மெடிக்கலின் தலைமை நிர்வாக அதிகாரி கிளைவ் ஸ்மித் உருவாக்கிய உலகின் மிகச்சிறிய, ஆனால் அதி சக்தி வாய்ந்த ஸ்டெதாஸ்கோப்பான டிஜிட்டல் திங்க்லேப்ஸ் ஒன் (The Digital Thinklabs One) ஸ்டெதாஸ்கோப்புகளின் வளர்ச்சிப் பரிணாமத்தில் புதிய மைல் கல்லை எட்டியது. ஒரு பேட்டியின் போது கிளைவ் ஸ்மித் “90களின் நடுப்பகுதியில் ஒரு நாள் ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதில் 1819-ம் ஆண்டில் ரெனே லானெக் அவர்கள் முதன்முதலில் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து இன்றுவரை குறிப்பிடக்கூடிய மாற்றம் எதுவுமே நிகழவில்லை என்று எழுதியிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உபகரணமே ஸ்டெதாஸ்கோப்தான். அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவில்லை என்று அறிந்ததும், அந்த மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இதுதான் என்று முடிவு செய்தேன்” என்று கூறினார்.
சொன்னது போலவே செய்தும் காட்டிய கிளைவ் ஸ்மித் ஒரு மின்காந்த உதரவிதானத்துடன் (Electromagnetic Diaphragm) கூடிய ஸ்டெதாஸ்கோப்பை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு காலப்போக்கில் அது மேலும் மேம்படுத்தப்பட்டு இன்று, டிஜிட்டல் திங்க்லேப்ஸ் ஒன் எனும் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய, ஆனால் ஒலியை 100 மடங்கு அதிகரிக்கக் கூடிய அட்வான்ஸ்டு வெர்ஷனையும் அவரே கண்டுபிடித்தார். இதிலுள்ள விசேஷ ஹெட்ஃபோன் ஜாக் தனிப்பட்ட முறையில் ஒலிகளைப் பிரித்தறிந்து கேட்க உதவுவதோடு, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் அல்லது கணினிகளுடன் இணைக்கப்பட்டு ரெக்கார்டிங் செய்யும் வசதியையும் கொண்டுள்ளன. இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளின் ஒலி அலைவடிவம் மற்றும் அதிர்வெண் ஆகியவற்றின் நிகழ் நேரக் காட்சியையும் இதில் பதிவு செய்து கொள்ளலாம் என்பது இதன் அட்டகாசமான அம்சம்.
இதற்கு ஒரு படி மேலே போய், இஸ்ரேலிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான சனோல்லா, சாதாரண மனிதனால் கேட்க முடியாத இன்ஃப்ராசவுண்ட் ஒலி (Infrasound) அலைகளைக் கேட்கக்கூடிய உலகின் முதல் AI- ஸ்டெதாஸ்கோப்களை கண்டுபிடித்துள்ளது. இன்ஃப்ராசவுண்ட் ஒலி அலைகள் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளால் பகுப்பாய்வு செய்யப்படும் போது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான சிஓபிடி, நிமோனியா, ஆஸ்துமா மற்றும் பல சிக்கலான பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்துகொள்ள முடிவதால் மனித உயிர்காக்கும் பிரமாஸ்திரமாக இதை மருத்துவர்கள் பார்க்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போலந்து ஸ்டெதோமீ நிறுவனம் உருவாக்கியுள்ள StethoMe AI எனும் நவீன கருவி – ஸ்டெதாஸ்கோப் வரலாற்றில் மற்றுமொரு முக்கியமான முன்னேற்றம். புளூடூத் வழியாக ஸ்மார்ட்போன் மற்றும் செயலியுடன் இணையும் இந்த ஸ்டெதாஸ்கோப், சிறிய குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. அதேபோல சமீபத்தைய கோவிட் அலையின் பின் உருவாக்கப்பட்ட வயர்லெஸ் ஸ்டெதாஸ்கோப்புகள் நோயாளிக்கும் டாக்டருக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளியையும் உருவாக்கியது.
தொடர்ந்து முன்னேறி வரும் தொழில்நுட்பம், எல்லாத் துறைகளிலுமே பல மேஜிக்குகளை நிகழ்த்தி வருகிறது. அந்த மேஜிக் ஸ்டெதாஸ்கோப்பிலும் தொடர்ந்து பிரதிபலிக்கும். அதன் திறன்களை மேம்படுத்த வரும் காலங்களில் இன்னும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டாகும். டிஜிட்டல் சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுடன் நிகழ் நேரச் சுகாதாரத் தரவு, பின்னூட்டம், மற்றும் விரிவான நோயாளி மதிப்பீட்டிற்கான ஆக்மென்ட்டட் ரியாலிட்டி காட்சிப்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மருத்துவத்துறையில் ஸ்டெதாஸ்கோப்புகள் செய்யப்போக்கும் அதிரடிப் புரட்சியைக் கூடிய சீக்கிரமே எதிர்பார்க்கலாம்.