தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான ஒரு படமாக இன்றும் ‘சதுரங்கவேட்டை’ கொண்டாடப்படுகிறது.
ஏமாறியவனைப் போலவே, ஏமாற்றுபவனும் நிம்மதியாக இருக்க மாட்டான் என்ற ஒன்லைனில் நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் எழுதிய திரைக்கதையால் அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் அ.வினோத். தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என சமூகத்தில் நிகழும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் ஹிட்.

* இயக்குநர் ஆவதற்கு முன்னர் சரளமாகக் கதைகள் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும், உலக சினிமாக்களின் ரசிகனாக இருந்திருக்க வேண்டும் என்ற பிம்பங்களை எல்லாம் உடைத்து, சினிமாவிற்குள் வந்தவர் அ.வினோத். சின்ன வயதில் இருந்து புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிப்பில் அதிக கவனம் செலுத்தியவர். பார்த்திபன், விஜய்மில்டன், ராஜுமுருகன் உட்பட சில இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஆவதற்கு முன்னர் கோயம்பேட்டிலும் வேலை செய்திருக்கிறார்.

* வெளிநாட்டில் வேலை செய்து, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் சின்ன வயது லட்சியம். திடீரென வந்தது தான் சினிமாக் கனவு. அதன் பின் ராஜுமுருகன் மூலமாக விஜய் மில்டனின் ‘கோலி சோடா’வில் வேலை செய்தார். ‘சினிமாவின் மீதான பிரமிப்பை உடைத்தவர் விஜய் மில்டன்’ என்பார்.
* இயக்குநர் நலன் குமாரசாமியின் நட்பினால், அவரிடம் தான் வைத்திருந்த கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு வியந்த நலன், மனோபாலா படம் தயாரிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். இதுபற்றி வினோத்தே பகிர்ந்தது இது.
”ரொம்ப வருஷமாகவே மனோபாலா சார் படம் தயாரிக்கணும்னு தீவிரமான முயற்சியில் இருந்தார். அதுக்காக நிறைய கதைகள் கேட்டுக்கிட்டிருந்தார். எதுவும் அமையாமல் இருந்துவந்தது. அந்தச் சமயத்துல நலன் குமாரசாமியோட ‘சூது கவ்வும்’ படத்தை அவர் பார்த்தார். உடனே நலன்கிட்ட படம் இயக்கக் கேட்டார். அப்ப நலன் வேற நிறுவனத்துல கமிட் ஆனதால, அவருக்கு பதிலாக மனோபாலா சார்கிட்ட நிறைய பேர்களை அனுப்பினார். அப்படித்தான் என்னை அவர் மனோபாலா சார்கிட்ட அனுப்பி வச்சார். நான் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடிச்சிடுச்சு. ‘உடனே பண்ணுவோம்’னு சொல்லி கையில அட்வான்ஸும் கொடுத்துட்டார்” என்கிறார்.

* ஃபேஸ்புக், ட்விட்டர் என்று எந்தச் சமூக வலைதளத்திலும் அவர் இல்லை. ”சோஷியல் மீடியா ஒரு படத்தை மார்க்கெட்டிங் பண்ணப் பயன்படுது. மத்தபடி அது நம்மளோட நேரத்தை ரொம்பவே வீணடிக்கிறது. தவிர பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும்… அதைப் பார்க்குறதைத் தவிர்க்க முடியாது. அதுக்கு நாம ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சா நம்ம மொத்த நேரமும் காலியாகிடும்” என்பார்.
* வினோத்தின் அப்பா பெயர் ஹரிமூர்த்தி. அதனால்தான் ஹெச்.வினோத் என்று எழுதிவந்தார். ‘ஹெச்’ எழுத்தைத் தமிழில் எழுதுங்கள் என சீமான் வேண்டுகோள் வைத்ததில், இப்போது அ. வினோத் ஆகிவிட்டார்.
* திருமணமானவர். ஒரே ஒரு மகள். ”வேலை, சினிமா இதெல்லாம் முக்கியம்தான். ஆனா, அதைத் தாண்டி குடும்பம், உங்க சொந்த வாழ்க்கை… இப்படி எல்லாமே இருக்கு. எது தேவையோ அதுக்கு முக்கியத்துவம் கொடுங்க. அதைப்போல நம்ம தேவைக்காக மத்தவங்களை எதுக்காகவும் தொந்தரவு பண்ணக் கூடாது” என்பதை அஜித்திடம் இருந்து கற்றுள்ளார்.

* ‘துணிவு’ படத்தை அடுத்து கமல்ஹாசனை இயக்குகிறார். கதையும் ரெடியாகிவிட்டது. அமெரிக்காவில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இருக்கும் கமல், சென்னை திரும்பியதும் வினோத்தின் படத்திற்குத் தயாராகிறார். அனேகமாக தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். இதனை அடுத்து தனுஷ் படத்தையும் இயக்குவார் என்ற பேச்சு இருக்கிறது. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அ.வினோத்.
அ.வினோத் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்த படத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்