நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை பா.ஜ.க கொண்டுவரப்போகிறது என்ற பேச்சுகள் ஓரிரு நாள்களாகப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பரபரப்பிலிருந்து மடைமாற்றப்படும் விதமாக `பாரதம்’ என்ற பெயர் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதற்கான அடித்தளத்தை, `ஜி20′ மாநாட்டின் அழைப்பிதழில் திரௌபதி முர்முவை `பாரத குடியரசுத் தலைவர் ( The President of Bharat)’ என அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
`இந்தியா, 140 கோடி மக்களுக்கானதே தவிர, ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல’ என எதிர்க்கட்சிகள் இதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றி வரும் வேளையில், `பாரதம் என்று அழைப்பதில் என்ன தவறு?’ என பா.ஜ.க கூறுகிறது. இவ்வாறு அரசியல் விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் இதில் என்ன கூறுகிறது, இது போன்ற விவகாரத்தில் கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1:
`இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் (India, that is Bharat, shall be a Union of States).’
இதன் மூலம், இந்தியா, பாரதம் என்ற இரண்டு பெயர்களையும் அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்பது தெரியவருகிறது.
2016-ல் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அமர்வில், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரரிடம், “பாரதமா அல்லது இந்தியாவா… நீங்கள் பாரதம் என்று அழைக்க விரும்பினால், பாரதம் என்றே அழையுங்கள். யாராவது இந்தியா என்று அழைக்க விரும்பினால், அவர்கள் அதை இந்தியா என்று அழைக்கட்டும். எனவே, இது போன்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது” என்று கூறிய நீதிமன்ற அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தது.
அதன் பிறகு 2020-லும் இதே போன்ற வழக்கு மீண்டும் வந்தபோது, அதை மறுத்த உச்ச நீதிமன்றம், இது போன்ற மனுவை பிரதிநிதித்துவமாக மாற்றி, உரிய முடிவுக்காக மத்திய அரசுக்கு அனுப்பலாம் என்று பரிந்துரைத்தது. மேலும், அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “பாரதம், இந்தியா இரண்டு பெயர்களும் அரசியலமைப்பில் இருக்கின்றன. மேலும், அரசியலமைப்பில் இந்தியா ஏற்கெனவே பாரதம் என்று அழைக்கப்படுகிறது” என்று கூறினார்.
அதன் பிறகு தற்போது மீண்டும், இந்தியாவை `பாரதம்’ என மாற்றுவது என்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
நாட்டின் பெயரை அரசு நினைத்தால் மாற்ற முடியுமா… அதற்கான சாத்தியக்கூறுகள் இந்திய அரசியலமைப்பில் இருக்கிறதா… அப்படி இருப்பின் அதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவின் பெயரை `பாரதம்’ என்று மாற்ற அரசு முடிவு செய்தால், முதலில் அரசியலமைப்புப் பிரிவு 1-ஐ திருத்தியமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அரசியலமைப்புப் பிரிவு 368, பெரும்பான்மை மூலமாக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது.
எனவே, பிரிவு 1 உட்பட, அரசியலமைப்பில் பிற திருத்தங்கள் கொண்டுவர, அதற்கான மசோதாவில் சிறப்பு பெரும்பான்மையாக, அவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 66 சதவிகிதம் பேர் வாக்களிக்க வேண்டும். மேலும், இதே நடைமுறையின்படி, புதிதாக மாநிலத்தை உருவாக்குதல், ராஜ்ய சபாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல் போன்ற அரசியலமைப்பின் சில பிரிவுகளில்கூட பெரும்பான்மை (50 சதவிகிதத்துக்கு மேல்) மூலம் திருத்தம் கொண்டுவரலாம்.
செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY