`இந்த உலகில் வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த உலகில் மிக நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.’ – மாவீரன் அலெக்ஸாண்டர்.
இன்று ஆசிரியர் தினம். நம் எல்லோருக்குமே ஆசிரியர் ஒருவராவது என்றென்றும் நினைவில் இருப்பார். `வாத்தியாருன்னா இப்பிடி இருக்கணும்ப்பா…’ என்று காலமெல்லாம் கொண்டாடவைக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அதனால்தான் கடவுளுக்கும் முந்தைய இடத்தை ஆசிரியருக்குக் கொடுக்கிறோம். ஒரு மனிதர், தன் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ஆசிரியரைப் பற்றி இணையத்தில் பகிர்ந்திருந்த கதை இது!
வகுப்பறை. ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பழக்கம்… போர்டில் எழுதியபடியே பாடம் எடுப்பார்; இடையிடையே மாணவர்கள் பக்கம் திரும்பி, “என்ன புரிஞ்சுதா?’’ என்று கேட்பார். ஒருமுறை திரும்பிப் பார்த்தபோது, ஒரு மாணவன் மட்டும் பாடத்தை கவனிக்காமல் இருப்பதைப் பார்த்தார். அதோடு, அங்குமிங்கும் அவனுடைய கண்கள் அலைபாய்ந்தபடியிருந்தன. அவனுக்கு ஏதோ பிரச்னை என்பது அவருக்குப் புரிந்துபோனது. அவனை அருகில் அழைத்தார்.
“ராம், என்ன ஆச்சு… பாடத்தை கவனிக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?’’ என்று குரலைத் தணித்துக்கொண்டு கேட்டார்.
“சார்… வந்து… வந்து…’’
“என்ன வந்து… ஏன் பாடத்தை கவனிக்க மாட்டேங்கிறே?’’
“என்னோட புது வாட்சைக் காணோம் சார்.’’
“கையிலதானே கட்டியிருந்தே?’’
“இல்லை சார். அது புது வாட்ச். யாராவது, ஏதாவது சொல்லுவாங்கன்னு பேக்குல வெச்சுருந்தேன் சார்…’’
“பேக்கை நல்லா பாத்தியா?’’
“பாத்துட்டேன் சார். இல்லை.’’ ராம் அழும் நிலைக்கு வந்திருந்தான். ஆசிரியர் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, தன் நாற்காலியில் அமர்ந்தார்.
`ஒரு நல்ல ஆசிரியரின் முக்கியத்துவத்தை போதுமான அளவுக்கு அழுத்தம் திருத்தமாக என்னால் சொல்லவே முடியாது.’ – அமெரிக்கக் கல்வியாளர் டெம்பிள் கிரான்டின் (Temple Grandin).
இரண்டே நிமிடங்கள். ஆசிரியர் தன் இருக்கையிலிருந்து எழுந்தார். “ஸ்டூடன்ட்ஸ்… எல்லாரும் எந்திரிங்க.’’
மாணவர்கள் எழுந்தார்கள்.
“அந்த சுவரோரமா போய் வரிசையா நில்லுங்க. நான் சொல்றவரைக்கும் யாரும் கண்ணைத் திறக்கக் கூடாது.’’
ஆசிரியர் சொன்னபடியே மாணவர்கள் சுவரோரமாக நின்றபடி கண்களை மூடிக்கொண்டார்கள். வாட்ச்சை எடுத்த மாணவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவனுடைய பாக்கெட்டில்தான் அந்த வாட்ச் இருந்தது. எங்கே மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் இதயம் `தடக் தடக்’ என்று அடிக்க ஆரம்பித்தது.
ஆசிரியர், மாணவர்களின் அருகில் வந்தார். ஒவ்வொரு மாணவனின் சட்டை, கால் சட்டை பாக்கெட்டிலும் கையைவிட்டுப் பார்த்தார். எல்லா மாணவர்களும் கண்களை மூடியிருந்தார்கள். ஒரு மாணவனின் பாக்கெட்டில் அந்த வாட்ச் இருந்தது. அதை எடுத்துக்கொண்ட ஆசிரியர், மற்ற மாணவர்களின் பாக்கெட்டுகளையும் ஆராய்ந்தார். பிறகு தன் இருக்கைக்குப் போனார்.
“ஸ்டூடன்ட்ஸ்… இப்போ கண்ணைத் திறக்கலாம். எல்லாரும் அவங்கவங்க சீட்ல போய் உட்காருங்க.’’
வாட்ச்சை எடுத்த மாணவனுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஆசிரியர் தன்னை எல்லோர் முன்னிலையிலும் கடுமையாகத் திட்டப்போகிறார், அடிக்கப்போகிறார் என்றெல்லாம் பயந்தான். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆசிரியர், ராமை அழைத்தார். அவனிடம் வாட்ச்சைக் கொடுத்தார்.
“இனிமே ஜாக்கிரதையா இருக்கணும், என்ன… வாட்ச்சை எப்பவும் கையிலதான் கட்டியிருக்கணும். புரியுதா?’’
“தேங்க் யூ சார்.’’ என்றபடி ராம் தன் சீட்டுக்குப் போனான். ஆசிரியர், வாட்ச்சை எடுத்த மாணவனைக் கூப்பிடவில்லை. அவன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. விட்ட இடத்திலிருந்து பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
`நீங்கள் யாரையாவது உயர்ந்த பீடத்தில் அமர்த்த வேண்டுமென்றால், ஆசிரியர்களை அமர்த்துங்கள். அவர்கள்தான் சமூகத்தின் நாயகர்கள்.’ – அமெரிக்க எழுத்தாளர், தொழிலதிபர் கை கவாசாகி (Guy Kawasaki)
எட்டாம் வகுப்பில் படித்த அந்த மாணவன், பள்ளியின் இறுதிப் படிப்பையும் அங்கேதான் முடித்தான். அவ்வப்போது ஆசிரியர் அவனைப் பார்த்தாலும், அவனிடம் அந்த வாட்ச் குறித்து ஒரு வார்த்தைகூட அவர் கேட்கவில்லை. அந்த மாணவன் பள்ளிப் படிப்பு முடித்து, கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டான். ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்துவிட்டான்.
ஒருநாள் ஏதோ ஓர் இலக்கியக் கூட்டத்துக்குப் போயிருந்தான். பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தன்னுடைய முன்னாள் ஆசிரியரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். கூட்டம் முடிவதற்காகக் காத்திருந்தான். அவருக்கருகில் போனான்.
“சார்… நான் சரண். என்னை ஞாபகம் இருக்கா?’’
ஆசிரியர் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு, அவனை உற்றுப் பார்த்தார். “சரணா… எந்த சரண்… எனக்கு அடையாளம் தெரியலையேப்பா.’’
“சார்… நான் நம்ப ஸ்கூல்ல எட்டாவது உங்க கிளாஸ்லதான் படிச்சேன். நீங்ககூட ஒருநாள், ஒரு பையன்… ராம்… அவனோட வாட்ச்சைக் காணோம்னு சொன்னதும் எல்லாரையும் வரிசையா கண்ணை மூடி நிக்கச் சொன்னீங்களே…’’
“ஆமா… ஆமா… ஞாபகம் இருக்கு. நீ அந்த கிளாஸ்லயா படிச்சே?’’
“ஆமா சார். அது மட்டுமில்லை… அந்த வாட்ச்சை எடுத்ததே நான்தான் சார். சும்மா விளையாட்டுக்காகத்தான் எடுத்தேன். உண்மையில திருடணும்கிற எண்ணம் எனக்கு இல்லை சார். அதோட அன்னிலருந்து விளையாட்டுக்குக்கூட யாரோட பொருள் மேலயும் ஆசைப்படுறதில்லை சார். நீங்க கூப்பிட்டுக் கண்டிப்பீங்கன்னு பார்த்தேன். ஆனா, என்னை ஒரு வார்த்தைகூடக் கேட்கலையே… ஏன் சார்?’’
“நீதானா அது… அன்னிக்கி உன்னைக் கூப்பிட்டுக் கண்டிருச்சிருந்தா உன்மேல ஒரு கறை விழுந்திருக்கும். மத்த பசங்கள்லாம் உன்னை திருடன்னு நினைக்க ஆரம்பிச்சிருப்பாங்க. உன் எதிர்காலமே பாழாப்போயிருக்கும். அதுனாலதான் எல்லா ஸ்டூடன்ட்ஸோட கண்ணையும் மூடச் சொன்னேன். அந்தச் சம்பவம் உன்னை எப்பிடி திருத்தியிருக்கு பாரு… நீ இந்த அளவுக்கு வளர்ந்தது எனக்கு பெருமையா இருக்கு சரண்…’’
சரண், கண்கள் கலங்க ஆசிரியரின் கையை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டான்.
ஆசிரியர் சொன்னார்… “உனக்கு இன்னொண்ணு தெரியுமா சரண்… அன்னிக்கி நானும் என் கண்ணை மூடிக்கிட்டுதான் எல்லாரோட பாக்கெட்டையும் செக் பண்ணினேன். வாட்ச்சை எடுத்த பையன் மேல எனக்கு பேட் இமேஜ் ஏற்பட்டுடக் கூடாது இல்லியா… அதுக்காக!’
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியருக்கு கமென்ட்டில் வாழ்த்துகளைப் பதிவிடுங்கள்!