சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கான எதிர்ப்பு தொடர்ந்து வலுத்துவருகிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களின் அமைச்சர்கள் உட்பட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், இன்றைக்கு (செப். 5) ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். பீகாரில் உதயநிதி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசிவிட்டார் என்று கொந்தளிக்கும் பா.ஜ.க தலைவர்கள், இந்த விவகாரத்தை ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராகத் திருப்பிவிட முயல்கிறார்கள் என்பது அவர்களின் பேச்சுகளிலிருந்தே தெரிகிறது. 2-ம் கட்ட பாதயாத்திரையைத் தொடங்கியிருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உதயநிதி பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, ‘மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசியதுபோல, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். வடஇந்தியாவுக்கு ராகுல் காந்தி இருப்பதைப்போல, தென்னிந்தியாவுக்கு உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி, வரலாறுகாணாத தோல்வியைச் சந்திக்கப்போகிறது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, இந்தியா கூட்டணியின் ஐந்து சதவிகித வாக்குகளைக் குறைத்திருக்கிறது’ என்றார் அண்ணாமலை.
‘சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சால், இந்தியா கூட்டணியே உடையும் சூழ்நிலை ஏற்படும்’ என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க-வின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன். டெல்லியில் நேற்று (செப். 4) செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, ‘அமைச்சர் உதயநிதி மட்டுமல்ல, அவருடைய குடும்பத்திலிருந்து எத்தனை தலைமுறை வந்தாலும் சனாதனதர்மத்தை ஒழிக்க முடியாது. அமைச்சர் உதயநிதியின் சர்ச்சைக் கருத்தை ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனவா… அவரது கருத்தால் இந்தியா கூட்டணியே உடையும் சூழ்நிலை வரப்போகிறது’ என்றார் வானதி .
‘அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்காக இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருக்கிறார். ‘இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன்… எந்த விவகாரமாக இருந்தாலும் முதல் ஆளாக கருத்து தெரிவிக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உதயநிதி பேச்சு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார்’ என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார்.

`காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மௌனம் காக்கிறார்கள்’ என்று ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்தை விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த கருத்து குறித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஏன் மௌனம் காக்கின்றன என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆனால், சனாதனம் பற்றிய உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கவில்லை. ‘தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்கள்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே நம்பிக்கை உண்டு. எனவே, அனைவருக்கும் உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடு. உதயநிதி அரசியலுக்குப் புதியவர் என்பதால், இது பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். எதற்காக அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’ என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான பிரியங்கா சதுர்வேதி, ‘சனாதனம் என்பது வாழ்க்கை முறை. சனாதனிகளின் அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவரும் படையெடுப்பாளர்களின் தாக்குதல்களில் அழிந்துவிடாமல், சனாதனிகள் மேலும் செழித்து ஓங்கியிருக்கிறார்கள்’ என்று ட்விட்டர் எக்ஸில் கூறியிருக்கிறார்.
இதற்குப் பின்னரும், உதயநிதியின் பேச்சை வைத்து இந்தியா கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடர்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY