இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுகிறதா என்ற சர்ச்சை வாதவிவாதங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. இந்தியா, பாரத்.. ஆகிய இரண்டு பெயர்களுமே அரசு அழைப்பிதழ்களில் மாறிமாறி பயன்படுத்தத்தக்கதே எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அபிஷேக் மனு சிங்வி கூறியிருப்பதாவது: பாரத், இந்தியா ஆகிய வார்த்தைகளை இந்திய அரசியல் சாசனத்தின் இந்தி மொழி பதிப்பில் மாறிமாறி பயன்படுத்துவது என்பது சரியானதே. ஆனால் அரசாங்கம் ஏதாவது ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. இதையொட்டி, டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஜி20 அமைப்பின் 20 உறுப்பு நாடுகள் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு இரவுவிருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக, இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், “இந்தியா, பாரத் என இரண்டு பெயர்களையும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் ஒரு பதத்தை பயன்பாட்டில் இருந்து நீக்க சட்டத் திருத்தம் தேவைப்படும்” என்று சட்டம், நீதித் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தின் முன்னாள் தலைவர் சிங்வி கூறுகிறார்.
அதேபோல் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அமன் லேகி கூறுகையில், “அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு என்றே நம் நாடு அறியப்படுகிறது. அதில் ஏதேனும் மாற்றம் செய்ய அரசியல் சாசன சட்டப்பிரிவு 368-ல் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மாற்றம் சாத்தியம் தான் என்றாலும் அதன் அவசியம் என்னவென்ற கேள்வி எழுகிறது. சில விஷயங்கள் எப்போதுமே சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதில் ஒன்று ஒரு தேசத்தின் பெயர். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டியனவற்றின் பட்டியலில் நாட்டின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது” என்றார்.
முன்னாள் சட்ட அமைச்சர் அஷ்வணி குமார் கூறுகையில், “பெயர் மாற்றம் தொடர்பான சர்ச்சையில் இப்போதைக்கு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது”என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் சாசன நிபுணர் ஒருவர் கூறுகையில், “பாரத குடியரசுத் தலைவர் என்று அழைப்பிதழ் அனுப்புவதில் எந்தத் தவறும் இல்லை. இருப்பினும் ஆங்கிலப் பெயர் பயன்பாட்டை விட்டொழிப்பதற்கான முதல் அடியாக இதை பார்க்கக் கூடாது.
நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை உச்ச நீதிமன்றத்திலும், ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 348(1) பிரிவு கூறுகிறது. அப்படியிருக்கும்போது அத்தகைய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றால் அது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கும்” என்றார்.