புதுடெல்லி: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்துக்கு ‘உரிய பதில்’ அளிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில்தான் சனாதன சர்ச்சை குறித்து பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். மத்திய அமைச்சர்களிடம் அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்; எனினும், வரலாறு பற்றி யாரும் பேச வேண்டாம். அரசியலமைப்பை ஒட்டிய உண்மைகளில் உறுதியாக இருங்கள். இது குறித்த தற்காலச் சூழல்கள் குறித்து பேசுங்கள்” என்றார். அதேநேரத்தில், “இந்தியா – பாரத் சர்ச்சை குறித்து யாரும் பேச வேண்டாம். இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பேச வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்’ என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உதயநிதியின் கருத்து இந்துக்களின் மீதான கடும் விமர்சனமாக வட மாநிலங்களில் உருவெடுத்து வருகிறது. அவரின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்திருந்தார். சனாதனம் மீதான விமர்சனத்தை வழக்குப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்தை வைத்து இண்டியா கூட்டணி மீது பாஜக தாக்குதல் தொடுத்தது. இதுகுறித்து பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங், “இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் அமைதி காப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இண்டியா கூட்டணிக் கட்சிகள் சனாதனம் மீதான விமர்சனத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும், இல்லை எனில் அவர்களை இந்த நாடு மன்னிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்தவரையில், அவர் ஒரு ஜூனியர். அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. அதன் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்” என்று கூறியிருந்தார்..
இதனிடையே, மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்கறிஞர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி திட்டவட்டம்: அதேவேளையில், “சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். தென்காசியில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசிமாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, “கருணாநிதி தலையைச் சீவஒரு கோடி ரூபாயை ஒரு சாமியார்அறிவித்தார். அதற்கு கருணாநிதி, ‘எனது தலையை நானே சீவி பலஆண்டுகள் ஆகிறது’ என்று சொன்னார். என் தலையை சீவச் சொன்ன உ.பி. சாமியாரின் சொத்து மதிப்பு 500 கோடியாம். இவர் சாமியாரா? எனது தலையை சீவ எதற்கு 10 கோடி ரூபாய்?. 10 ரூபாய்க்கு சீப்புவாங்கினால் போதும். சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
மணிப்பூர் மாநிலம் 5 மாதமாக பற்றி எரிகிறது. அங்கு ஆட்சி செய்வது பாஜக. இதுவரை 250-க்கும்மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் இதுவரை அங்கு சென்று பார்க்கவில்லை. மணிப்பூரில் விளையாட்டு வீரர்கள் அதிகம். அவர்கள் பயிற்சி பெற தமிழக முதல்வர் அழைப்பு விடுத்ததன் பேரில், பலர் தமிழகத்தில் தங்கி பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதான் சனாதன மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்” என்று பேசினார்.
உதயநிதி வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று பலர் புகார் அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை சன் ரைஸ் அவென்யூவில் உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான இல்லம் மற்றும் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம் அலுவலக பகுதியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அலுவலகம் உள்ளது. இந்த 2 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.