எம்.ஜி.ஆர், சிவாஜியை அறிமுகப்படுத்தியவர் : பழம்பெரும் நடிகர் டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழா

நாடகத்தில் இருந்து சினிமா வளர்ந்த காலத்தில் இரண்டு துறையிலும் முன்னணியில் இருந்த நடிகர், தயாரிப்பாளர் டி.வி.நாராயணசாமி. அவரது நூற்றாண்டு விழா வருகிற 8ம் தேதி சென்னை தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. பாரதி திருமகன் வில்லிசையுடன் விழா தொடங்குகிறது. ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்கிறார்.

பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, சச்சு முன்னிலையில் டிவிஎன் உருவ படத்தை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் திறந்து வைக்கிறார். விழா மலரை, இயல் இசை நாடக மன்றம் தலைவர் வாகை சந்திரசேகர் வெளியிட, முதல் பிரதியை, தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் எம்.நாசர் பெற்றுக் கொள்கிறார்.

வாழ்க்கை குறிப்பு:
திராவிட இயக்க தலைவர்களால் 'டிவிஎன்' என்று அன்போடு அழைக்கப்பட்ட டி.வி.நாராயணசாமி திருநெல்வேலி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள, சி.துரைச்சாமி புரம் சிற்றூரில் 1921ல் பிறந்தார். அவரது கிராம மக்கள் நடத்திய, லவன்- குசன் நாடகத்தில், பத்து வயது சிறுவனாக இருக்கும்போதே, லவனாக நடித்து, கிராம மக்களின் பாராட்டைப் பெற்றவர். பதினோரு வயதிலேயே பிரகலாதன் வேடத்தில் நடித்து, பால கதாநாயகனாக உருவானவர்,

1936ம் ஆண்டு, டி.கே.எஸ் சகோதரர்களின் மதுரை பால சண்முகானந்த சபாவில் சேர்ந்து, புராணம், சரித்திர, சமூக, நாடகங்களில் நடித்து, புகழ் பெற்றார். சந்திரோதயம் நாடகத்தில் அண்ணாதுரையுடன் நடித்தார். 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் நடிக்க அப்போது நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்து கொண்டிருந்த வி.சி.கணேசனை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அந்த கணேசன்தான் பிற்காலத்தில் சிவாஜி கணேசன் ஆனார். “நான் சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் டி.வி.நாராயணசாமிதான். அவர்தான் என் சினிமா குரு” என்று பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டார்.

பராசக்தி, புதையல், சிவகங்கைச் சீமை, அல்லி, முதலிய திரைப் படங்கள், அவர் நடித்ததில் குறிப்பிடத் தக்கவையாகும். எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா நடித்த மணிமகுடம், எஸ்எஸ்ஆர் தங்கரத்தினம், இளையராஜா இசையில், ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இயக்கத்தில் உருவான, தம்பிக்கு ஒரு பாட்டு முதலிய திரைப் படங்களையும் தயாரித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் என பதவிகள் ஏற்று, தென்னிந்திய நடிகர் சங்க வளர்ச்சிக்காக உழைத்தவர். இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராக தொடர்ந்து 8 ஆண்டுகள் பணியாற்றி, நலிவுற்ற கலைஞர்களுக்கு பல நன்மைகளைசெய்தவர். நாடகத் துறையிலும், திரை துறையிலும், அரசியலிலும், 60 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.