காவிரி தண்ணீர் திறப்பு குறைப்பு – தமிழகத்திற்கு செக் வைத்த கர்நாடகா – நல்ல செய்தி சொல்லுமா உச்சநீதிமன்றம்?

காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் தர வேண்டிய நீரை கர்நாடகம் தராததால், தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் காவிரியில் இருந்து கர்நாடகா உரிய நீரை திறக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 24,000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு வலியுறுத்திய போதிலும், வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லாததால் குறிப்பிட்ட அளவு நீரை திறக்க இயலாது என கர்நாடகம் கூறிவிட்டது.

எனினும் கடந்த ஒரு வாரமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்பட்டதால் தமிழகத்திற்கான நீர் வரத்து 9,000 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 6,500 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் வரத்து தற்போது 6,000 கன அடியாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,428 கன அடியில் இருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,500 கன அடியாக உள்ளது.

நிலையில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “காவிரியில் இருந்து திறந்த விடும் நீரின் அளவை 3,000 கனஅடியாக குறைக்க ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை அளவீடுகளை ஒட்டுமொத்த காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கணக்கிட வேண்டும். கர்நாடகத்தின் 4 அணைகளில் உள்ள நீரின் அளவை மட்டும் வைத்து கணக்கிட கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி தொடர்பான வழக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த எதிர்பார்ப்புக்கும் விடை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.