வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன் கடந்த மாதம் 23ம் தேதி நிலவில் தரை இறங்கியதும், அதன் உள்ளே இருந்த, ‘பிரஜ்ஞான் ரோவர்’ கலன் வெளியேறி நிலவில் சோதனை மேற்கொள்ள துவங்கியது.
அதற்கு விதிக்கப்பட்டு இருந்த அனைத்து சோதனைகளையும் ரோவர் கலன் செய்து முடித்ததை அடுத்து, கடந்த 2ம் தேதியன்று, ‘ஸ்லீப் மோட்’ எனப்படும் உறக்க நிலைக்கு ரோவர் கலன் மாற்றப்பட்டது.
தற்போது நிலவில் இரவு துவங்க உள்ளது. அப்போது, அங்கு கடுங்குளிர் நிலவும். அந்த நேரத்தில் லேண்டர், ரோவர் கலன்கள் செயலிழந்து போகும். எனவே, லேண்டர் கலனின் செயல்பாடுகளை சற்று உசுப்பி விடுவதற்காக, விக்ரம் லேண்டர் கலனின் இயந்திரம் மீண்டும் உயிர் பெற்றது.
3டி புகைப்படம்
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் மிக துல்லியமாக ஆக., 30ம் தேதி எடுக்கப்பட்ட 3டி புகைப்படத்தை இஸ்ரோ நேற்று(செப்.,05) வெளியிட்டது. 3டி கண்ணாடி அணிந்து புகைப்படத்தை பார்த்தால் முப்பரிமாண அனுபவம் கிடைக்கும் எனவும், நிலவில் உறக்க நிலைக்கு செல்லும் முன் ரோவர் எடுத்துள்ள புகைப்படம் இது என இஸ்ரோ கூறியிருந்தது.
நாசா வெளியீடு
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது.
சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது. நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ தொலைவில் சந்திரயான்-3 விண்கலம் நிலை கொண்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement