ராம்பூர்: மத உணர்வுகளை சீர்குலைத்ததாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் வழக்கறிஞர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காகவும், அவரின் கருத்துக்கு பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்ததற்காகவும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராம்பூரில் உள்ள சிவில் சர்வீஸ் காவல் நிலையத்தில் தமிழகம், கர்நாடகா அமைச்சர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A (வேண்டுமென்றே திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்களை செய்தல்), பிரிவு 153 A (இரண்டு மத குழுக்களுக்கு இடையில் வேண்டுமென்றே பகையைத் தூண்டுதல்) ஆகியவைகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம் சிங் லோதி ஆகியோர் ஊடங்கள் வெளிச்சம்போட்டுக்காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்தப் பேச்சு தங்களின் மனதினை புண்படுத்தி விட்டதாக பேசிய அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசிய போது, ‘சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல்காரியம்’ என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உதயநிதியின் கருத்தினை ஆதரித்து பேசிய கர்நாடாகா அமைச்சர் பிரியங்க் கார்கே,”சகமனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத, எந்த மதமும் நோயைப் போன்றது. உதயநிதிக்கு அவர் நினைக்கும் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.
இதனிடையே, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியிருந்தனர். அக்கடிதத்தில் அவர்கள், அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கருத்துகள் மறுக்க முடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்பு பேச்சாக உள்ளது. பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பை இந்த வெறுப்பு பேச்சு தாக்குகிறது.
வெறுப்பு பேச்சால் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம்.உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.