சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் அந்தப்பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெகன் மீன் கடையில் இருந்தார். அப்போது ஆறு பேர் கும்பல் மீன் கடைக்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் ஜெகனை சுற்றி வளைத்து வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க கடையில் இருந்து சாலைக்கு ஓடி வந்தார் ஜெகன். ஆனாலும் அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டி ஜெகனை வெட்டி சாய்த்தது. இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .பின்னர் ஆம்புலன்ஸிக்கும் காவல் நிலையத்துக்கும் அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த ஜெகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க பிரமுகர் ஜெகனின் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
இது குறித்து நொளம்பூர் போலீஸார், “ கொலைசெய்யப்பட்ட ஜெகனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு. அவர் அ.தி.மு.க-வில் இருந்தார். அதன்பிறகு அ.ம.மு.க-வில் இணைந்தார். ஜெகனின் அண்ணன் மதன் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்குப் பழிவாங்க கடந்த 2021-ம் ஆண்டு கவுன்சிலராக இருந்த அ.தி.மு.க பிரமுகர் ராஜேஷ் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் கைதான ஜெகன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார்.

சொந்த ஊரில் இருந்தால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கருதிய ஜெகன், தன்னுடைய இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். ஆனாலும் ஜெகனை ஒரு கும்பல் கொலை செய்துவிட்டது. ஜெகன், ராஜேஷ் என இரண்டு டீம்களுக்கிடையே அரசியல் மோதல் மற்றும் ஊரில் நடந்த கோயில் திருவிழா மோதல் என முன்விரோதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பழிக்குப்பழியாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வந்திருக்கின்றன. அதனால் ஜெகனின் கொலைக்கு ராஜேஷ் டீம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே ஜெகனின் கொலைக்கான காரணம் தெரியவரும்?” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY