பானஸ்வாடி : மதுரை தி.மு.க., பிரமுகர் குருசாமி வெட்டப்பட்ட ஹோட்டலில், அதன் உரிமையாளர் சிறப்பு பூஜை செய்தார்.
தமிழகம் மதுரையைச் சேர்ந்தவர் குருசாமி, 55. தி.மு.க., பிரமுகர். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்.
இவரது குடும்பத்திற்கும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரின் குடும்பத்திற்கும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் உள்ளது.
இதனால் இரு குடும்பத்திலும் பழிக்குப் பழியாக கொலைகள் நடந்து வந்தன.
இந்நிலையில், பெங்களூரு பானஸ்வாடியில் வசிப்பதற்கு வீடு தேட, மதுரையில் இருந்து பெங்களூருக்கு கடந்த 3ம் தேதி குருசாமி வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, கம்மனஹள்ளி சுக்சாகர் ஹோட்டலில், டீ குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த கும்பல், குருசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. உயிருக்குப் போராடியவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணை நடத்த இரண்டு தனிப்படை போலீசார், மதுரைக்கு சென்றுள்ளனர்.
குருசாமியை வெட்டிய கும்பல், அரிவாளுடன் தப்பி ஓடும் காட்சிகள், ஹோட்டல் அருகே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குருசாமி வெட்டப்பட்ட ஹோட்டலில் ரத்தக்கறை படிந்து இருந்ததால், ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர்.
மேலும் நேற்று காலை ஹோட்டலின் உரிமையாளர், ஹோட்டலில் சிறப்பு பூஜை நடத்தினார்.
பட விளக்கம்:
6 9 2023 blr ph 1குருசாமி வெட்டப்பட்ட ஹோட்டலில் சிறப்பு பூஜை நடந்தது. இடம்: கம்மனஹள்ளி, பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்