பெங்களூரு : ‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுவரை 70 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். துாக்கத்தில் இருக்கும் சித்தராமையா அவர்களே, எழுந்திருங்கள்’ என, கர்நாடக மாநில பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.
இதுதொடர்பாக ‘எக்ஸ்’ எனும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
உணவளிக்கும் விவசாயிகளின் தொடர் தற்கொலை நிற்கவில்லை. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கர்நாடக விவசாயிகளுக்கு காவிரி நீர் இல்லை. இருப்பினும் தமிழகத்துக்கு தினமும் 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அசுத்தமான தண்ணீர் வினியோகம், பெரும் உயிரிழப்பு மற்றும் துன்பம் தொடர்கிறது.
முன்னர் விலைவாசி உயர்வால் வருத்தத்தில் இருந்தனர். தற்போது அரிசியின் விலை கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். 135 தாலுகாக்களில் வறட்சி நிலவினாலும், வறட்சியை அறிவிக்காமல் காங்கிரஸ் அரசு பிடிவாதமாக உள்ளது.
ஆட்சியில் அனுபவம் உள்ள முதல்வர் சித்தராமையா, மவுனமாக இருப்பது, கன்னடர்களுக்கு பேரிடியாக உள்ளது. உறங்கியது போதும், எழுந்திருங்கள் சித்தராமையா அவர்களே!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement