உத்தமபாளையம்: தேனி – குமுளி சுங்கச் சாலையில் உள்ள பல அறிவிப்பு பலகைகள் சேதமடைந்தும், தலைகீழாகவும் உள்ளன. மேலும் எச்சரிக்கை பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலையானது தமிழக – கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக (எண் 183) உள்ளது. சபரிமலை மகரவிளக்கு, மண்டல பூஜை வழிபாட்டுக் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் வாகனங்கள் இந்த வழியை கடந்து செல்கின்றன. இந்த சாலை கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி முதல் இருவழிச் சாலையாக பயன்பாட்டுக்கு வந்தது.
தேனி மாவட்டத்தின் முதல் சுங்கச் சாலை என்ற நிலையைப் பெற்ற இந்த வழித்தடத்தில், வாகனப் போக்குவரத்து அதிகரித்ததை அடுத்து சாலையோரங்களில் ஹோட்டல், பேக்கரி, தங்கும் விடுதி உள்ளிட்ட வர்த்தக செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. வாகனங்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக பயணிக்க வழிநெடுகிலும் அபாயகரமான திருப்பம், விபத்து ஏற்படும் பகுதி, வேகக் கட்டுப்பாடு, ஊர்களின் தொலைவு குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தற்போது பல இடங்களில் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் அறிவிப்பு பலகை தலைகீழாக தொங்குகின்றன. ஊர்களின் தொலைவுகளை குறிப்பிடும் கி.மீ. கற்களில் உள்ள விவரங்கள் தெளிவாக இல்லை. சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள், இந்த அறிவிப்பு பலகைகளால் குழப்பமடைகின்றனர். சரியான விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. சாலையோரங்களில் உள்ள மண் குவியலில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சுங்கச் சாலை என்பதால் ஒவ்வொரு வாகனமும் உரிய கட்டணங்களை செலுத்தி பயணித்து வருகின்றன. ஆனால் கட்டணங்களைப் பெறுவதில் காட்டும் ஆர்வத்தை சாலை பராமரிப்பில் அதிகாரிகள் காட்டுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் கூறுகையில், குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மண் அள்ளும் இயந்திரம் கி.மீ. கற்களையும், அறிவிப்பு பலகைக்கான இரும்பு கம்பங்களையும் சேதப்படுத்திவிட்டன. இவற்றை சரி செய்யவும், சாலையோரத்தில் குவிந்திருக்கும் மண்ணை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்