முன்பெல்லாம் டி.ஜே மியூசிக் என்பது கிளப்களில் மட்டுமே இசைக்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி அபரிமிதமானது. கல்யாண வீடுகள் தொடங்கி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், கான்சர்ட்கள் வரை என `டி.ஜே’க்கள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றனர். அப்படிப் பிரமாண்டமாக அரங்கேறும் அனைத்து இசை வெளியீட்டு விழாக்களிலும் தனது முத்திரையைப் பதித்துவிடுவார், டி.ஜே கெளதம்.
‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘சர்க்கரை நிலவே’ பாடலின் வீடியோ கிளிப்பைப் பலரும் கண்டுகளித்திருப்பார்கள். அதைப் பலரும் ரசிப்பதற்கு இவரின் ஹோம்வொர்க்தான் முக்கிய காரணம். அதுமட்டுமன்றி ‘மாவீரன்’, ‘ஜெயிலர்’, ‘ஜவான்’ எனப் பல இசை வெளியீட்டு விழாக்களையும் தனது டி.ஜே பெர்ஃபாமன்ஸுடன் தொடங்கி வைத்திருக்கிறார் கெளதம். அனிருத்தின் கான்சர்ட்களுக்கு அவருடன் டி.ஜே-வாக பல நாடுகளுக்கும் பயணித்துவருகிறார். லண்டனில் பரப்பரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தவரிடம் அலைபேசியில் பேசினோம்.
“நான் 14 வருஷமா டி.ஜே-வாக இருக்கேன். நான் வழக்கமான டி.ஜே-வாக இல்லாம கொஞ்சம் வித்தியாசமா பண்ணணும்னு விரும்புவேன். 9 வருஷம் விஜய் டி.வி-ல இருந்தேன். நானும் டி.ஜே பிளாக்கும் 5 வருஷம் ஒண்ணாதான் வேலை பார்த்தோம்.
‘ஜோடி நம்பர் 1’ ஃபைனல்லதான் முதன்முதலா டி.ஜே பிளாக் என்கிட்ட வந்து சேர்ந்தான். அவன மாதிரி கடினமாக உழைக்கிற ஒருத்தன நான் இதுவரை பார்த்ததே இல்ல. எல்லா விஷயத்திலேயும் அவன் பெர்ஃபெக்ட்டாக இருப்பான். நான் அந்தந்த நிகழ்ச்சிகளுக்கான கான்சப்ட்டை மட்டும்தான் சொல்லிக் கொடுத்தேன். அவனே நல்லா பிக்-அப் பண்ணி எனக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டான்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/648806b98e349.jpg)
பிறகு, நான் பல விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணணும்னு வெளிய வந்துட்டேன். இப்போ அனிருத் பிரதரோட கான்சர்ட்களுக்குப் பல ஊர்களுக்குப் பயணம் செஞ்சு டி.ஜே-வா பெர்ஃபாம் பண்ணுறேன். இப்போ லண்டன்ல இருக்கேன். அடுத்து யுவன் பிரதர் கூட கனடால நடக்கப்போற கான்சர்ட்டுக்கு வேலைப் பார்க்கிறேன். இப்போ பல அவார்டு நிகழ்ச்சிகள்ல, ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல பேக் ஸ்டேஜ்ல டி.ஜே வேலை பார்க்கிற கான்சப்ட்டை அறிமுகப்படுத்தினது நான்தான். முதன் முதலாக ‘விஜய் அவார்ட்ஸ்’ல பண்ணினோம். பிறகு, ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சில இந்த கான்சப்டைத் தொடர்ந்தோம். அனிருத் பிரதர்கூட கான்சர்ட்களுக்கு பெர்ஃபாம் பண்ணுனதுக்குப் பிறகுதான் நான் பலருக்குப் பரிச்சயமானேன். அதுக்குப் பிறகு, ‘வாரிசு’, ‘ஜெயிலர்’, ‘ஜவான் ‘படத்தோட இசை வெளியீட்டு விழாகள்ல பெர்ஃபாம் பண்ணினத பார்த்துட்டு வெளிநாட்ல இருந்து கூப்பிட்டாங்க.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Snapinsta_app_307218847_620714676412080_3725968318901703122_n_1080.jpg)
எனக்கு 19 வயசு இருக்கும் போது டி.ஜே-வாகனும்னு ஆசை வந்தது. முதல்ல எங்க அம்மா இதுக்கு சம்மதம் தெரிவிக்கல. எங்க சித்திதான் எனக்குப் படிக்கிறதுக்குக் காசு கொடுத்தாங்க. முன்னாடிலாம் ஒரு கல்யாண வீட்டுல டி.ஜே இருக்கும். ஆனா, இன்னைக்கு அப்படி இல்ல. இப்போ டி.ஜே பண்ணுறதுக்கு எல்லோரோட கைகள்ல லேப்டாப் இருக்கு. ஆனா, முன்னாடிலாம் சி.டிதான் இருக்கும். அதை எடுத்துட்டு கிளப்புக்கெல்லாம் போவோம். இன்னைக்கு இதெல்லாம் ஈஸியாகிடுச்சு. ஆனா, அம்மாக்கு இப்போ பெருமை. பலர்கிட்ட போய் ‘என் பையன் வெளிநாட்டுல இருக்கான்’ன்னு சொல்லுவாங்க” என்பவர், பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாக்களில் நிச்சயம் பங்குகொள்வார். இசை வெளியீட்டு விழாக்களின் தொடக்கத்தில் படகுழுவினரைப் பற்றி இவர் ஒலிபரப்பும் பாடல்கள்தான் பார்வையாளர்களை ஒன்றிணைத்து நிகழ்விற்குள் ஆழ்த்தும்.
அதுகுறித்துப் பேசிய அவர், ‘”வாரிசு’ ஆடியோ லான்ச் என்னுடைய தொடக்கம் இல்ல. நான் ‘மெர்சல்’, ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாக்களிலும் பெர்ஃபாம் பண்ணியிருக்கேன். அப்போலாம் கன்சோல்ல இருந்து பாடல்களை ப்ளே பண்ணுவேன். ‘வாரிசு’ திரைப்படத்தோட ஆடியோ லாஞ்சுக்கு அனிருத் கான்சர்ட்க்குப் பண்ணுற மாதிரி ப்ளே பண்ணச் சொன்னாங்க. தளபதி விஜய்யும் நிகழ்ச்சியோட தொடக்கத்திலேயே பெர்ஃபாம் பண்ணுறதுக்கு பாசிட்டிவ் வைப் கொடுத்தாரு. யாருமே பண்ணாத விஷயத்தைப் பண்ணணும்னுதான் நான் எப்போதும் விரும்புவேன். நான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் போகும்போதும் அனிருத் பிரதருக்கு மெசேஜ் அனுப்பிடுவேன். அவரும், ‘சூப்பர் டா, ராக் இட்’ன்னு ரிப்ளை பண்ணுவாரு. அவர் பாசிட்டிவான எனர்ஜியைத்தான் கொடுப்பார். ‘வாரிசு’ ஆடியோ லான்ச் முடிஞ்சதும் விஜய் சார் எனக்குப் பூங்கொத்து, ஸ்வீட் பாக்ஸ்லாம் அனுப்பி வச்சாரு. என்னோட ஆரம்பக் காலகட்டத்துல இருந்து என்னைய வழிநடத்துறது மா.கா.பா அண்ணன்தான். அவர்கூட நான் பல விஷயங்கள் ஷேர் பண்ணிப்பேன்” என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Snapinsta_app_347406917_18372944209018121_7341528376599927485_n_1080.jpg)
“அனிருத் பிரதர் எனக்கு கால் பண்ணி ‘ஜெயிலர்’ படத்தோட சக்சஸ் மீட் இருக்கு, வந்துரு’ன்னு சொன்னாரு. நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சாரோட பயங்கரமான ஃபேன். அந்த சக்சஸ் மீட்ல அவர்கூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன். அப்போ என் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சின்ன வயசுல ரஜினி சார் மாதிரி ஆட்டோக்காரன் கெட்டப்லாம் போட்டிருக்கேன். அப்போ அனிருத் பிரதர் என்கிட்ட ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச்ல பெர்ஃபாம் பண்ணுன ஆடியோ வச்சு பெர்ஃபாம் பண்ணச் சொன்னாரு. நானும் பெர்ஃபாம் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு ரஜினி சார் ‘சூப்பர், சூப்பரா பண்ணுறீங்க’ன்னு சொன்னாரு” என்றவர் குரலில் அளப்பரிய மகிழ்ச்சி தெரிந்தது.
“ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் போறதுக்கு முன்னாடியும் நான் அடியோக்கள்ல வேலைப் பார்ப்பேன். இப்போ ‘வாரிசு’ ஆடியோ லான்ச்ல ‘சர்க்கரை நிலவே’ பாட்டோட கிளிப் வைரலாச்சு. அந்தப் பாடலோட வரிக்குப் பிறகு ஒரு வசனத்தைச் சேர்த்து ப்ளே பண்ணினேன். அது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. இது மாதிரி வீட்டுல இருக்கும் போது ஆடியோக்களை ரெடி பண்ணுவேன். ரெடி பண்ணிட்டு என் ப்ரண்ட்ஸுக்கெல்லாம் அனுப்புவேன். ஆனா, இந்த மாதிரி ஒரு பெர்ஃபாமன்ஸுக்கு முன்னாடி ரெண்டுநாள் தூங்காம இருந்து ரிகர்சல் பண்ணணும், பல விஷயங்களைத் திட்டமிடணும்” என தனது துறை குறித்து முழுமையாக விவரித்தவர்,
“என்னோட கரியர் தொடக்கத்துல என்னைய ஒரு கிளப்ல பெர்ஃபாம் பண்ண விடல. ‘உனக்கு என்ன அனுபவம் இருக்கு, போய் முழுசா கத்துக்கிட்டு வா’ன்னு சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு நான் பல இடங்களுக்குப் போய் பெர்ஃபாம் பண்ணுறேன். நான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். அடுத்த வருஷத்துக்குள்ள இதைவிட இன்னும் பெருசா வரணும். புதுமையான பல கான்சப்ட்களைப் பண்ணணும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Snapinsta_app_364199639_247363351513471_7313479999902355237_n_1080.jpg)
ரேடியோ மிர்ச்சில ‘கிளப் மிர்ச்சி’ன்னு ஒரு ஷோ நானும் என் ஃப்ரெண்ட் டி.ஜே அபிலாஷும் பண்ணுறோம். அதுக்குப் பெரிய அளவுல ரீச் கிடைச்சது” என்றவர், தற்போது அனிருத்தின் கான்சர்ட்டுகளுக்கு டி.ஜே-வாக இருந்துவருகிறார்.
இதுகுறித்து அவர், “அனிருத் பிரதரோட அம்மாதான் முதன் முதலா என்ன கான்சர்ட்ல பெர்ஃபாம் பண்ணுறதுக்குக் கூப்பிட்டாங்க. எப்போதும் அவர் ஊக்கமளிப்பார். எங்க வீட்ல என்னைப் பார்த்துக்கிற மாதிரி அனிருத் பார்த்துப்பாரு. அடுத்ததாக ‘லியோ’ ஆடியோ லான்ச்லேயும் பெர்ஃபாம் பண்ணுவேன்னு நினைக்கிறேன்!” என முடித்துக்கொண்டார்.