அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிரீன்பர்க்கில் 1975-ம் ஆண்டு பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த காவல்துறை, லியோனார்ட் மேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரைக் கைதுசெய்தது. அப்போது டி.என்.ஏ சோதனை சாத்தியமில்லை என்பதால், லியோனர்ட் மேக் மீது வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. விசாரணைக்குப் பிறகு, லியோனார்ட் மேக்குக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் innocence எனும் திட்டத்தின் மூலம், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்காக வாதாடும் குழு, லியோனர்ட் மேக் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிந்தது. மேலும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அதனடிப்படையில் 47 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த லியோனர்ட், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
இது குறித்துப் பேசிய மாவட்ட வழக்கறிஞர் அலுவலக தலைவர், “அமெரிக்க வரலாற்றில், டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் தண்டனை நீக்கப்படும் இன்னசென்ஸ் திட்டத்தின்கீழ், செய்யாத குற்றத்துக்காக நீண்டகாலம் தண்டனை அனுபவித்த லியோனர்ட் மேக், தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது 72 வயதாகும் லியோனார்ட் மேக் இந்த விடுதலைக் குறித்துப் பேசியபோது, “என்னவெல்லாமோ நடந்தது. இறுதியாக நான் சுதந்திரமாக இருக்கிறேன். இந்த நிம்மதிபோதும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க தேசிய விடுதலை அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் கறுப்பின மக்கள் 13.6 சதவிகிதம் மட்டுமே என்றாலும், 1989 – 2022-க்கு இடையில் தண்டனைகள் ரத்து செய்யப்பட்ட 3,300 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கறுப்பினத்தவர்கள். மேலும், 1989-ம் ஆண்டு முதல் புதிய டி.என்.ஏ சோதனைகளின் அடிப்படையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 575 பேர் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 35 பேர் மரண தண்டனைக்காகக் காத்திருந்தவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.