ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று ஆனந்த விகடன் யூ-ட்யூப் சேனலில் நடிகர் சார்லியின் நேர்காணல் தொடராக வெளியாகிறது. இந்த வாரம் வெளியான நேர்காணலின் எழுத்துவடிவம் இது.
நகைச்சுவையைத் தாண்டி உங்கள் நடிப்பில் தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்த வெவ்வேறு முகபாவனைகளைக் காட்டுவீர்கள். இதற்காக நீங்கள் ஹோம்வொர்க் செய்வீர்களா அல்லது சுற்றியிருக்கும் மனிதர்களைக் கவனிப்பீர்களா?
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693385111_514_Screenshot__104_.png)
“இது இதுவரை நான் சந்திக்காத கேள்வி. இதற்கு ஹோம்வொர்க் பண்ண முடியாது. ஆனால் எப்போதும் தயார்நிலையில் இருக்கவேண்டும். எனக்கு நடிகர் திலகம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் கடைசி மூச்சு வரை வாழ்க்கையைப் படித்துக்கொண்டே இருந்தார். மனிதர்களைக் கவனிப்பதைவிட முக்கியமானது மனிதர்களை நேசிப்பது. ஒரு இளைஞன் ஆர்வத்துடன் செல்பி எடுக்கவருகிறான் என்றால், அவனுக்கு செல்பி எடுப்பது முக்கியமில்லை, ‘நான் விமானநிலையத்தில் சார்லியை சந்தித்து புகைப்படம் எடுத்தேன்’ என்று மற்றவர்களுக்குத் தெரிவிப்பதுதான் முக்கியம். அந்தப் பையனுடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுக்கும்போது நாம் அவன் உணர்வுகளை உள்வாங்கிப் பிரதிபலிக்க முடியும். ஒரு நடிகர் தன் வாழ்வுக்கு உண்மையாக இருந்தால் அவரால் எந்த உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும்”
“வி.கே.ராமசாமி முதல் யோகிபாபு வரை தலைமுறை தாண்டிய நகைச்சுவை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது…?”
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/vk_ramaswamy.jpg)
“நம்முடைய தமிழ்மொழி தொன்மையானது, பாரம்பரியமானது, இலக்கியச்செறிவு மிக்கது என்பதைத் தாண்டி நம் மொழிக்கு என்று தனித்துவமான நகைச்சுவை உணர்வு உண்டு. தமிழ்மொழியின் இந்தப் பண்புதான் தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு அடிப்படையாக இருக்கிறது. இது ஒரு விஷயம். மேற்கத்திய காமெடி படங்களில் முழுக்க காமெடி மட்டுமே இருக்கும். ஆனால் தமிழ் சினிமாக்களிலோ சோகம், கருத்து சொல்லும் இடம் என்று பல அம்சங்களுடன் நகைச்சுவை வரும்போது, பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில், பல திரைப்படங்கள் எடுத்து முடித்தபிறகு, அவரைத் தனியாக நடிக்கவைத்து அந்த காமெடி டிராக் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. படம் பலவீனமாக இருந்தால் அந்தப் பகுதிகள் தனியாகத் தெரியும். இல்லையென்றால் கதையோட்டத்துடன் இணைந்த இயல்பான நகைச்சுவையாக இருக்கும். கலைவாணருக்குப் பெயரே நகைச்சுவை டாக்டர்தான். கலைவாணர் காலத்திலிருந்து இப்போதுள்ள காலம்வரை மிக அற்புதமான நகைச்சுவை நடிகர்களைக் கொண்டது தமிழ் சினிமா.”
“தனி காமெடி டிராக்கில் இருந்து இப்போது பிளாக் ஹியூமர் வரை வந்திருக்கிறோம். இந்த ஜானர்களை எப்படி பிரிக்கலாம்?”
“பிளாக் ஹியூமர் என்பது நம் வாழ்க்கையிலேயே இருக்கிறது. சிறுவயதில் இறப்பு நடந்த வீட்டுக்குப் போகும்போது நான் விவரம் தெரியாமல் சிரித்திருக்கிறேன். சிரித்து அடியும் வாங்கியிருக்கிறேன். துக்கவீட்டில் அழுபவர்களை நன்றாகக் கவனித்துப்பாருங்கள். அவர்கள் அழும்போது அந்த ஓசையை கட் செய்துவிட்டால் அவர்கள் சிரிப்பதைப்போலவே இருக்கும். சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அகத்தியன் இயக்கிய படம் ‘ராமகிருஷ்ணா’. அகத்தியன் முழுக்க சீரியஸாகப் படத்தைக்கொண்டுபோக விரும்பினார். சிவசக்தி பாண்டியனோ அதில் காமெடி காட்சிகள் சேர்க்கவேண்டும் என்று விரும்பினார். என்னைச் சுற்றியிருப்பவர்கள் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாகச் சொல்லி என்னை நம்ப வைப்பதுதான் காமெடி. அதை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்தார்கள். இப்போதும் ஏதாவது தொலைக்காட்சியில் அந்தப் படத்தை ஒளிபரப்பும்போதும் யாராவது போன் செய்து அந்த நகைச்சுவைக்காட்சிகளைப் பற்றிப் பேசுவார்கள். பிளாக் ஹியூமரோ உடல் மூலம் நிகழ்த்தப்படும் நகைச்சுவையோ அது நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள்”
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/FQO63YxXoAMN2P5.jpg)
“ப்ரெண்ட்ஸ் திரைப்படம் உங்களைப் பெரியளவில் கொண்டுசேர்த்தது. அந்தத் திரைப்படம் இப்படி ஒரு மாபெரும் வெற்றி அடையும் என்று எதிர்பார்த்தீர்களா?”
“இயக்குநர் சித்திக், ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அப்போதிருந்தே சித்திக் பழக்கம். மலையாளப்படமான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்யப்போகிறோம், நீங்களும் நடிக்கிறீர்கள் என்று சொன்னார். அவரிடமிருந்து அழைப்பு வரும் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. ஒருநாள் தற்செயலாக அவரைக் கோவை விமான நிலையத்தில் சந்தித்தேன்.
‘சார்லி சார், உங்களைத் தேடினோம்; கிடைக்கவில்லை’ என்றார். ‘இப்பதான் கிடைச்சுட்டேனே, உங்க முன்னால் நிற்கிறேனே’ என்றேன். ‘ஏற்கெனவே 15நாள் ஷூட்டிங் முடிந்துவிட்டதே’ என்றார் சித்திக். விமானத்தில் பயணிக்கும்போது A Chump at Oxford என்ற திரைப்படத்தில் ஸ்டேன் லேரல் நடித்ததைப் பற்றி அவரிடம் சொன்னேன். தலையில் அடிபடுவதற்கு முன்பு ஒருமாதிரியும் அடிபட்டபிறகு வேறுமாதிரியும் அவர் நடித்திருப்பார். இதைச் சொன்னதுடன் அதேபோல் நடித்தும் காட்டினேன்.
‘நல்லாயிருக்கு இதை வேறமாதிரி பண்ணலாம் சார்லி’ என்றார் சித்திக். பிறகு நான் நடித்த அந்த கோபால் கேரக்டர் எனக்காகவே தமிழில் உருவாக்கப்பட்டது. ஒரிஜினல் மலையாளப்படத்தில் அந்த கேரக்டர் இல்லை. நிறையபேர் அந்த கேரக்டரைப் பாராட்டினார்கள். குறிப்பாக மம்முட்டி ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கே சார்லி’ என்று பாராட்டினார்.
அப்படி வந்ததுதான் ‘ப்ரென்ட்ஸ்’ வாய்ப்பு. ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ‘இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறுமா பெறாதா’ என்றெல்லாம் யாராலும் சொல்லிவிட முடியாது. ஒரு படம் ஓடுகிறதோ ஓடவில்லையோ நான் மகிழ்ச்சியுடன்தான் நடிப்பேன். ஏனென்றால் என் வேலையை நான் ரசிக்கிறேன். நான் ‘பொய்க்கால் குதிரை’, ‘அண்ணே அண்ணே’, ‘பூவிலங்கு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று முதல் நான்கு படங்களில் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில்தான் நடித்தேன். ஐந்தாவது திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத் தயாரிப்பில் ‘நாம் இருவர்’. அதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நடித்தது மிகப்பெரும் பாக்கியம். சாமிப்பிள்ளை என்ற கேரக்டர் எனக்கு. அநாதைப்பையனாக நடித்தேன். சிவாஜிக்கு குடிகாரர் கேரக்டர். நிறைய காட்சிகளில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகத்துக்கு சில உடல்நலப்பிரச்னைகள் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Screenshot__105_.png)
அந்த நேரம் உலகநாயகன் கமலுடன் ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தில் நடிக்க கவிதாலயாவில் இருந்து அழைப்பு வந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிப்பு ஆளுமைகளுடன் நடிக்க வாய்ப்பு அமைந்தது, அதுவும் என் கரியரின் தொடக்கத்திலேயே அமைந்தது என்பது மிகப்பெரும் பாக்கியம்.
இப்படி ஒவ்வொருநாளும் நான் ரசித்து ரசித்து நடிப்பு என்னும் என் வேலையைச் செய்ததால்தான் இவ்வளவு காலம் தமிழ் சினிமாவில் நீடிக்கமுடிகிறது. நான் நடிகர் திலகத்துடன் நடித்திருக்கிறேன்; இளையதிலகம் பிரபு அண்ணனுடன் நடித்திருக்கிறேன்; விக்ரம்பிரபுவுடன் நடித்திருக்கிறேன். இப்படி சத்யராஜ் அண்ணன் – சிபி, நாகேஷ் சார் – ஆனந்த்பாபு சார் – அவரது மகன் பிஜேஷ், நாசர் சார் – அவரது மகன் என்று ஒரு நீண்ட பட்டியலே சொல்ல முடியும்.
ஒரு நடிகர் வாய்ப்புகளைத் தேடி அலையக்கூடாது. வாய்ப்புகள் நடிகர்களைத் தேடி வரவேண்டும். அப்படி வரவேண்டும் என்றால் அந்த நடிகர் தன் திறமையை நிரூபித்திருக்க வேண்டும்”
– (தொடரும்)