"மனைவி, சகோதரி, தாய் உறவு முறைகளை மாத்திருவீங்களா.?" எச். ராஜா ஆவேசம்

காரைக்குடி:
“சனாதனம் நிலையானது; நிலையாக இருப்பதை மாற்றுவதுதான் திராவிட மாடல் என்று உதயநிதி சொல்லி இருக்கிறார். நான் கேட்கிறேன்.. மனைவி உறவு நிலையானது தான். சகோதரி என்கிற உறவும் நிலையானது தான். உங்களால் இந்த உறவு முறைகளை மாற்ற முடியுமா?” என்று எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சனாதனம் என்பதற்கு இந்து மதம் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், இந்து மதத்தினரை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் உதயநிதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உதயநிதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காரைக்குடியில் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

சனாதனம் பற்றி சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாத முட்டாள்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சனாதனம் பற்றி கற்று தேர்ந்த அறிஞர்கள் உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி அரைகுறை வெடலை உதயநிதி பேசினால் ‘இந்தியா’ கூட்டணி எப்படி சிதறிப்போகும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உதயநிதி, திருமாவளவன் போன்ற தீய சக்திகள் சனாதனம் நிலையானது என்றும், எதையுமே நிலை இல்லாமல் செய்வதுதான் திராவிடம் எனவும் பேசியுள்ளார்கள்.

சரி.. எல்லாம் நிலை இல்லாதது தானே.. அப்படியென்றால் தாய், மனைவி, சகோதரி ஆகிய உறவுகள் மாற்றத்திற்கு உட்பட்டதா என்று மட்டும் அவர்கள் பதில் சொல்லட்டும். இன்னைக்கு இருக்குற ஜாதிகள் எல்லாம் அன்றைக்கு இருந்ததில்லை. அன்று இருந்தது வெறும் நான்கே வர்ணங்கள் தான். ஆனால் இன்றைக்கு 4000 ஜாதிகள் இருக்கின்றன. இதற்கு பிராமணனா பொறுப்பு? இல்லையென்றால் சனாதனம் பொறுப்பா? கொஞ்சமாவது மூளை வேண்டாமா..? என எச். ராஜா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.