புதுடில்லி, மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழிலாளிகளை, ரத்த தானம் அளிக்க தகுதியற்றவர்களாக நிர்ணயிக்கும் மத்திய அரசின் விதிகளை எதிர்க்கும் வழக்கில், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
ரத்த தானம் அளிப்பது தொடர்பாக, 2017ல் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி, மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழிலாளிகள், ஆணுடன் உறவு கொள்ளும் ஆண் ஆகியோர், ரத்த தானம் அளிப்பதற்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதான்ஷு துலியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையின்போது அமர்வு கூறியதாவது:
ரத்த தானம் தொடர்பாக மத்திய அரசின் விதிமுறைகளின்படி, எய்ட்ஸ் நோயை உருவாக்கும், ‘எச்.ஐ.வி., ஹெபாடிடிஸ் பி மற்றும் சி’ போன்ற கிருமிகள் பாதிக்கப்பட்டோர் ரத்த தானம் வழங்க முடியாது.
இந்தப் பிரிவினர், இது போன்ற வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ரத்தம் என்பது ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதாகும். ரத்த தானம் பெறுபவருக்கு, சுத்தமான ரத்தம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ரத்தம் தானமாக வழங்குவதை, அரசியல் சாசனத்தின்படி, அனைவருக்கும் சம உரிமை என்று கூற முடியாது. மருத்துவ காரணங்களுக்காக ஏன் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது? இதனால் மத்திய அரசின் விதிகளுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியது.
இந்த விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகளுடன் இணைத்து இந்த வழக்கை விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement