புதுடில்லி, ‘அமெரிக்காவில் பணியாற்றும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், தங்களது வாழ்நாளுக்குள் நிரந்தர குடியுரிமைக்கான, ‘கிரீன் கார்டு’ பெற முடியாத நிலை உள்ளது’ என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் இந்தியர்களும், சீனர்களும் அதிக அளவில் உள்ளனர்.
அங்கு பணியாற்றுவதற்கு, விசா கிடைப்பதற்கே நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து பெறுவதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போதுள்ள நிலவரம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கோடோ இன்ஸ்டிடியூட்’ எனப்படும் ஆய்வு அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள், கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து, 18 லட்சம் மனுக்கள் நிலுவை யில் உள்ளன.
இதில், 63 சதவீதம் பேர் இந்தியர்கள். இதைத் தவிர, குடும்பத்தாருக்கு கிரீன் கார்டு கேட்டு, 83 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
தற்போதைய நிலையில், கிரீன் கார்டு கேட்டு, 11 லட்சம் இந்தியர்களின் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில், இந்தியர்களே அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில், ஓர் ஆண்டில் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில், 7 சதவீதம் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் தான் அதிகளவில் மனுக்கள் நிலுவையில் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில், மிகவும் அதிகபட்சமாக, 134 ஆண்டுகள் வரை கிரீன் கார்டுக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதன்படி பார்க்கையில், 4.24 லட்சம் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய வாழ்நாளில் கிரீன் கார்டை பெற முடியாது. இதில், 90 சதவீதம், அதாவது, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்