AI சூழ் உலகு 6 | மனிதன் – அஃறிணை இடையிலான உறவுச் சவால்!

நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். காலப்போக்கில் அதில் மனக்கசப்பு ஏற்படலாம். அது சிலருக்கு படிப்பினையாகவும் அமையலாம்.

மீண்டும் அதே போன்றதொரு உறவுடன் வாழ்க்கை சுழற்சியின் ஓட்டத்தில் நாம் சந்திக்கலாம். அது நட்பு, காதல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய உறவு முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் என்ட்ரி இருந்தால் அது எப்படி இருக்கும். அதை நினைத்து பார்க்கும்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறது அல்லவா. காதல், நட்பு என்பதெல்லாம் உணர்வுபூர்வமானது. அதனை அஃறிணையுடனும் கடத்த முடியும். அதற்கான டிஜிட்டல் டெக் யுகம் இது. ரிலேஷன்ஷிப் சயின்ஸின் கீழ் மனிதன், அஃறிணையின் உறவு குறித்து வரையறை செய்யப்படுகிறது. அது குறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2023 ஜூனில் திருமணம் செய்தது உலக அளவில் பேசுபொருளானது. அதுமட்டுமல்லாது உறவுமுறை சுமூகமாக செல்ல ஏஐ-யின் அட்வைஸையும் நாம் பெறலாம். இப்போதைக்கு இதில் ஏஐ உதவினாலும் வரும் நாட்களில் அதன் போக்கு எப்படி இருக்கும் என்பது புரியாத புதிர். ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் மனிதர்கள் உள்ளிடுகின்ற கட்டளைக்கு கட்டுப்படும் பணியைத்தான் இப்போதைக்கு அஃறிணை மேற்கொண்டு வருகின்றது.

கரோனா தொற்றுக்கு பிறகு உலக மக்கள் உறவுமுறை சார்ந்து ஏஐ வசம் அட்வைஸ் பெறுவது அதிகரித்துள்ளது. சிலருக்கு ஏஐ உடன் உரையாடுவது ஆறுதல் தருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏஐ உறவை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உலக மக்கள் அனைவரும் அவசியம் அதனை என்கவுண்டர் செய்தாக வேண்டும்.

தொழில் புரட்சி ஏற்பட்டது கூட்டுக் குடும்ப உறவு முறையை மாற்றி அமைத்தது. நியூக்லியர் ஃபேமிலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. டிஜிட்டல் காலத்தில் அது அப்படியே மாறி லிவ்-இன் முதலான மாற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, பெருந்தொற்று காரணமாக உலகமே பொது முடக்கத்தில் இருந்தபோது ‘கற்றது தமிழ்’ படத்தில் நாயகனுக்கு ஆதரவாக பேசும் நாயகியின் குரல் போல சிலருக்கு ஏஐ உதவியதாக சொல்லப்படுகிறது.

ரிலேஷன்ஷிப் என்பது ட்ரையல் அண்ட் எரர் முறை சார்ந்தது. நாம் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் கொடுப்பதோடு நம்மை கேள்வி கேட்பது, விவாதிப்பது, பின்னர் சுமூகமாக போவது என்று தான் வாழ்வில் உறவுகளை கடந்து வருகிறோம். இந்த ரோலில் நம்முடன் ஏஐ எப்படி பொருந்துகிறது என்பது போக போகத்தான் தெரியும். ஏஐ எந்திரங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் அல்லது தான் பெற்ற நுண்ணறிவோடு சிந்தித்தாலும் மீண்டும் மீண்டும் பொம்மை போல அதே பணியை தான் மேற்கொள்ளும். இருந்தாலும் சென்சார் துணைக்கொண்டு எதிரில் இருப்பவர்களின் உணர்வுகளை ஏஐ புரிந்து கொண்டு அது சார்ந்து பேசும்.

உறவு முறைகளுடன் மனதார முழு ஈடுபாட்டுடன் இணைந்து இயங்க ஏஐ பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் அதன் துணை கொண்டு சமூக உறவுகளை மறுவரையறை செய்யலாம். வாழ்வில் எந்தவொரு உறவுக்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கலாம். இருந்தாலும் இந்த ரிலேஷன்ஷிப்பில் சட்ட ரீதியான வழிகாட்டுதலும் அவசியம். இல்லையெனில் எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ரெட் சிப் மாட்டிக்கொண்டு மனித குலத்துக்கு எதிரியாக மாறலாம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் Andreessen Horowitz எனும் நிறுவனம் மனிதர்கள் தங்களுக்கு ஏஐ இணையர்களை துணையாக அமைத்துக் கொள்ள உதவுகிறது. இது குறித்து அடுத்த அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.