Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்… தவிர்க்க வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 55. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு மதியநேரம் வரை வயிற்றுப் பிரச்னைகள் இருப்பதில்லை. மதியத்துக்கு மேல் வயிற்று உப்புசமும் வாயு பிரிவதும் அதிகமாக இருக்கிறது. இதனால் பணியிடத்திலும், வீட்டிலும் தர்மசங்கடத்தை உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

வாயு பிரிவதுடன், வயிற்று உப்புசம், மேல் வயிற்றிலோ, கீழ் வயிற்றிலோ அதிகமான வலி, வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தாலோ, மலம் கழிப்பதில் சிரமம் இருந்தாலோ, மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறினாலோ, மலத்தின் நிறம் வெளிறியதுபோல இருந்தாலோ, காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை குறைந்தாலோ, சாப்பிடவே தோன்றாத அளவுக்கு பசியின்மை இருந்தாலோ உடனடியாக நீங்கள் பொது மருத்துவரையோ, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரையோ அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.

வாயு பிரிகிற மற்றும் வயிற்று உப்புச பிரச்னை உள்ளவர்கள் பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், மோர் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல கோதுமை உணவுகளையும் சில நாள்களுக்கு நிறுத்தி, ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கலாம். நிறைய பேருக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னைகள் இருக்கலாம். அதிக உப்பு சேர்த்த உணவுகளாலும் பிரச்னை வரலாம்.

தயிர்

சிலர் நார்ச்சத்து நல்லது என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமான காய்கறிகள், பழங்கள் என சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. அதிக அளவிலான நார்ச்சத்தும் வயிற்றுப் பிரச்னைகளைத் தரலாம் என்பதால் அவற்றிலும் அளவோடு இருப்பதுதான் சரியானது. வெங்காயம், பூண்டு, மசாலா போன்றவற்றை அதிகம் சேர்த்த உணவுகளாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். சாப்பிடும்போது ஒவ்வொரு வாய் உணவையும் நன்கு மென்று, உமிழ்நீரோடு சேர்த்துச் சுவைத்து மெதுவாகவே விழுங்க வேண்டும்.

ஆனால் இன்று பலரும் வேகவேகமாகச் சாப்பிடுகிற பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படிச் சாப்பிடும்போது நம்மை அறியாமல் நிறைய காற்றையும் சேர்த்தே விழுங்குவோம். அதனாலும் வாயு பிரிவதும் வயிற்று உப்புசமும் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து நன்கு சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடவும்.

ஆல்கஹால் அறவே தவிர்க்கப்பட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்பருமன் காரணமாக வயிற்றுத் தசைகள் தளர்வாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் வயிற்றுத்தசைகளை டைட்டாக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி

50 வயதுக்குப் பிறகு இந்தப் பிரச்னைகள் இருந்தாலோ, உங்களுக்கு இதற்கு முன் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்திருந்தாலோ மருத்துவரை அணுகி எண்டோஸ்கோப்பி சோதனை செய்து பார்க்கலாம். மிக அரிதாக வயிற்று உப்புசம் என்பது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே வயிற்று உப்புசம் என்பது தொடர்கதையாக இருந்தால் தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.